கட்சிகளின் இணைவு என்பது முக்கியமல்ல அது ஒரு அர்த்தபூர்வமாக இருக்க
வேண்டும். தமிழ் கட்சிகளுக்குள் நான் பெரிய கட்சி நீ பெரிய கட்சி என்ற
நிலைப்பாடு மாறும் வரை ஒற்றுமையும் இல்லை, தமிழ் மக்களுக்கு விடுதலையும்
இல்லை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்து்ளளார்
வவுனியாவில் சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம் திறப்பு விழாவின்
போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கோரிக்கை ஒன்றை முன்
வைத்தார் ஏன் சமத்துவக் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணையக்
கூடாது என்று. நாங்கள் இணையமாட்டோம் என்று எமது கதவுகளை இழுத்து
மூடிவிடவில்லை. ஆனால் முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை
இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் போதே இணைவும் அர்த்தபூர்வமாக
காணப்படும் அதுவே தமிழ் மக்களுக்கு நன்மையினையும் பெற்றுக்கொடுக்கும்
எனத் தெரிவித்த சந்திரகுமார்
நாட்டில் இனங்களுக்கிடையேயும், இனத்திற்குள்ளும் சமத்துவம் இன்மையே எமது
கட்சியின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. எங்களுடைய கட்சியில்
அதிகளவான பெண் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். ஆனால்
இங்கு மிக கவலையோடு ஒரு விடயத்தை கூறுகின்றேன். தமிழீழ
விடுதலைப்புலிகளின் தலைவர் புலிகள் அமைப்பில் அனைத்து துறைகளிலும்
மகளீர் அமைப்புக்களை உருவாக்கி பெண்களின் சமத்துவத்தை செயல்வடிவில்
காட்டியவர். ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும்
தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிலர் கிளிநொச்சியில்
சமத்துவக் கட்சியின் பெண் வேட்பாளர்களை நோக்கி கடந்த உள்ளுராட்சி
தேர்தலின் போது மிக மிக கேவலமாக அவதூறுகளை செய்தார்கள். சபையில்
பேசமுடியாத வார்த்தைகளை பயன்படுத்தினார்கள் பெண்களுக்கு சமத்துவத்தை
வழங்கிய தலைவரைால் உருவாக்கப்பட்ட கட்சியை சேர்ந்தவர்களா இவர்கள் என்று
மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் காணப்பட்டன.எனத்
தெரிவித்த அவர்
இன்று உள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக
போராட்டக் காலங்களில் ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள். இவர்கள்தான்
அன்று வியர்வை சிந்தியவர்களுக்கு, ஆயுதம் ஏந்தி
போராடியவர்களுக்கு,துரோகிகள் என்று பட்டம் வழங்குகின்றவர்களாக
காணப்படுகின்றனர். துரோகி பட்டபம் வழங்குவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை
உள்ளது. இன்று ஆயுதம் ஏந்தி போராடியவர்கள ் துரோகிகள் என்றால் அவர்களை
ஆதரித்த மக்களும் துரோகிகளா? எனத் தெரிவித்தார்.