ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொடர்ந்து விமர்சித்து வந்த அந்த நாட்டின் முன்னாள் எம்.பி. பாவெல் அன்டோவ், இந்தியாவின் ஒடிசாவில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் எம்.பி.யாக இருந்தவர் பாவெல் அன்டோவ். தொழிலதிபரான இவர் ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். உக்ரைனுடனான போரைத் தொடர்ந்து இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை அடிக்கடி கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் பாவெல் அன்டோவ் சுற்றுலாவுக் காக இந்தியா வந்திருந்தார். இவர்உள்பட மொத்தம் 4 பேர் ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள தனியார் ஹொட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 21ஆம் திகதிஅன்டோவ் உள்ளிட்ட 4 நண்பர்களும் அதிகளவில் மதுபானம் குடித்திருந்தனர்.
பாவெல் அன்டோவ் தனது 66வதுபிறந்தநாளை அதே தினத்தில் அங்கு கொண்டாடினார். இந்நிலையில் 22ஆம் திகதி ஓட்டலின் 3 வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து மர்மமான முறையில் இறந்தார். ஹொட்டல் 3வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே விழுந்து அவர் இறந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இது தற்கொலையா? அல்லது எதிர்பாராத வகையில் தவறி விழுந்து அன்டோவ் இறந்தாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக ஒடிசா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 21ஆம் திகதி அவருடன் தங்கியிருந்த நண்பரான விளாடிமிர் என்பவரும் மாரடைப்பால் இறந்தார். அந்தமரணம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாவெல் அன்டோவும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.