வலி. மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சங்கானை சந்தை கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து சிலர் தொடர்ந்து மதுபான பாவனையில் ஈடுபட்டு வருவதாக வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சுபாஜினி சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற 58வது சபை அமர்விலேயே அவர் இந்த விடயத்தினை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேல் மாடிக்கு செல்லும் பாதையில் உள்ள கதவு சிறியதாக இருப்பதனால் அந்த வழியால் செல்லும் மதுப்பிரியர்கள் மேல் மாடியில் இருந்து மதுவருந்துகின்றனர்.
கடைத்தொகுதிகள் இரவு பூட்டிச் சென்ற பின்னர் இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் பாரா முகமாக உள்ளனர். பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்துவதில் அவர்கள் முலம் எந்த பிரியோசனமும் ஏற்படும் என தெரியவில்லை.
இவ்வாறு மது அருந்துபவர்கள் மூலம் கடைகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அசம்பாவிதங்கள் இடம்பெற முன்னர் இந்த விடயம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயத்தினை கருத்தில் கொள்வதாகவும், நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த பகுதியில் பொலிஸ் சோதனை சாவடி அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்தார்.