மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு ஞாயிற்றுக்கிழமை 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திடம் இருந்து கிக்பேக் பெற்றது தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
யாமீன் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.
அவர் 2018 இல் அதிகாரத்தை இழந்தார். ஆனால் 2023 இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலத்தீவுகளின் முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 1 மில்லியன் டொலர் அரசு நிதியை மோசடி செய்ததற்காக 5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது தண்டனைக்குப் பிறகு, யாமீன் 2020 இல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டு, சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் சர்வாதிகாரி மௌமூன் அப்துல் கயூமின் ஒன்றுவிட்ட சகோதரரான யாமீன், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து மாலத்தீவில் இந்திய செல்வாக்கிற்கு எதிரான பிரச்சாரத்துடன் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். இது புது டில்லியில் கவலைகளை எழுப்பியது.
இந்தியப் பெருங்கடலில் மூலோபாய கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள மாலைதீவுகள், பிராந்தியத்தில் செல்வாக்கின் மீது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியின் மையப் புள்ளியாகும்.




