மருத்துவத்துறை சார்ந்த உங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் எழுதி அனுப்புங்கள். தமிழ் பக்கத்தின் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ (0766722218) அல்லது pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
எஸ்.எம்.அமானுல்லா (39)
கேகாலை
என்னுடைய சுவாசம் துர்நாற்றமாக இருக்கிறது என மனைவி அப்படித்தான் சொல்கிறாள். என்னை நெருங்கவே தயங்குகிறாள். எனக்காகவும் அவளுக்காகவும் இதை உடனே சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?’
டாக்டர் ஞானப்பழம்:
கெட்ட சுவாசத்தை ‘ஹாலிடோசிஸ்’ என்பார்கள். அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. உணவுக் குழாயில் நோய்த் தொற்று, ஈறு வீக்கம், பல் சொத்தை, ஈரல் பாதிப்பு, சிகரெட் பழக்கம், நீரிழிவு நோய், அஜீரணக் கோளாறு, மூக்கில் நோய்த் தொற்று, மூக்கில் சதை வளர்தல், சைனஸ் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பல காரணங்களால் சுவாசத்தில் நாற்றம் வரலாம். உரிய வைத்தியரை அணுகி மருத்துவம் பார்த்தால், இவை சரியாகும்.
இவை தவிர, சரியாகப் பல் துலக்காததும், பூண்டு வெங்காயம் அதிகம் சாப்பிடுவதும் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். சாப்பிடும் உணவு, வாய் சுத்தம் போன்றவற்றில் கவனம்கொண்டால், இவை சரியாகும். பொதுவாக, மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
அன்ரனி ஜாக்சன்
சிலாபம்
ஆணுறுப்பை நீளமாக்குவதற்கு வழி உள்ளதா? வேக்கம் பம்ப் எனும் கருவி ஆண்குறியைப் பெரிதாக்க உதவும் என்கிறார்களே?. அது உண்மையா? அத்துடன், என் ஆண்குறியின் தலைப்பகுதியில் தோல் ஒட்டி உள்ளது. நான் ஆண் உறுப்பை சுத்தமாகத்தான் பராமரிக்கிறேன். ஆனால், உடலுறவு கொள்ளும்போது, தோல் பின்பக்கமாக நகர்ந்து, வலியை ஏற்படுத்துகிறது. இதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?
டாக்டர் ஞானப்பழம்:
உங்கள் வயதைக் குறிப்பிடாததால் பிரச்னையை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், 3 வெவ்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இவை உங்கள் பிரச்சினைகளா அல்லது இணையத்தில் படித்த சந்தேகங்களா என தெரியவில்லை. ஆனாலும் பரவாயில்லை.
முதலாவது, வளர் இளம் பருவத்தில்தான் ஆணுறுப்பு முழுமையாக வளர்ச்சி அடையும். அதாவது 18 முதல் 20 வயதில். அதன் பிறகு, அதை நீளமாக்குவதற்கு எந்தப் பயிற்சியும் இல்லை. ஒரு வேளை உங்களுக்கு ஹோர்மோன் சரிவிகிதத்தில் இல்லாத காரணத்தால், ஆண்குறி சின்னதாகக் காணப்பட்டால், போலி வைத்தியர்களிடம் செல்லாமல், நல்ல வைத்தியரை அணுகவும். ஹோர்மோன் சரிவிகிதமாவதற்கு மருந்துகள் தருவார். இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
இரண்டாவதாக, வேக்கம் பம்ப் பற்றி கேட்டிருந்தீர்கள். வேக்கம் பம்பு, விரைப்புத் தன்மைக்கானவையே தவிர, ஆண்குறியை நீளமாக்குவது அல்ல.
மூன்றாவது, ஆணுறுப்பின் தோல் பகுதி இப்படித் தலைப்பகுதியோடு ஒட்டி இருப்பதை ‘ஃபைமோஸிஸ்’ என்பார்கள். சிலருக்குப் பிறவிக் குறைபாட்டால் அப்படி அமைந்திருக்கும். ‘சர்கம்சிஸன்’ எனப்படும் சிறிய அறுவைசிகிச்சை செய்தால் சரியாகிவிடும்.
க.நிரூபன் (27)
தண்ணீரூற்று
எனக்கு எளிதில் விந்தணு வெளிப்படும் பிரச்னை இருக்கிறது. விந்தணு சீக்கிரம் வெளிப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏதோ டெக்னிக் உள்ளது என்று இணையத்தில் படித்திருக்கிறேன். ஆனால், அது எனக்குச் சரியாகப் புரியவில்லை. அந்த டெக்னிக் பலன் தருமா? அது பற்றி சொல்ல முடியுமா?”
டாக்டர் ஞானப்பழம்:
முன்கூட்டியே விந்தணு வெளிப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல், டெக்னிக் என்று கண்மூடித்தனமாக இருப்பது தவறு. இருப்பினும், நீங்கள் கேட்டதால் அந்த நுட்பத்தைப் பற்றி சொல்கிறேன். இதற்கு ஸ்க்வீஸ் நுட்பம் (Squeeze Technique) என்று பெயர். இதை ஸ்டார்ட், ஸ்டாப் நுட்பம் என்றும் சொல்லலாம்.
இந்த செயல்முறையில், மனைவி தன் கணவனின் ஆண் உறுப்பைக் கைகளால் தொட்டுத் தூண்ட வேண்டும் அல்லது மாஸ்டர்பேஷன் எனப்படும் சுயஇன்பம் செய்வதைப் போல செய்ய வேண்டும். கிட்டத்தட்ட உச்சத்தை அடைந்து, விந்தணு வெளிப்படும் நேரத்தில் அது கணவனுக்குத் தெரியவரும். அடுத்த விநாடியே தூண்டுதலை நிறுத்தும்படி மனைவியிடம் சொல்லி, மிகத் துல்லியமாகத் தூண்டலை நிறுத்திவிட்டு, விரைப்பாக உள்ள ஆண் உறுப்பின் நுனியில் தோல்சேரும் பகுதியில் (Frenulum) விரல்களால் ஒரு சில விநாடிகள் அழுத்தி, வேகத்தைக் குறைக்க வேண்டும்.
இப்படிச் செய்வது, விந்தணு வெளிப்படுவதை நிறுத்தும். விந்தணு வெளிவருவது நின்ற உடன் இதை மீண்டும் செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவரும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, விந்தணு முன்கூட்டியே வெளிவருவது பழக்கத்தினால் கட்டுப்படும். உங்கள் பிரச்னைக்கு இந்த ஸ்க்வீஸ் நுட்பம் மட்டும் முழுமையான தீர்வாக நினைத்து இருந்துவிட வேண்டாம். மருத்துவர் அளிக்கும் சிகிச்சையில் இது ஒரு பகுதி மட்டுமே என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
எம்.நிவேதிதா (25)
இடம் குறிப்பிடவில்லை
எங்களுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அடுத்த குழந்தை இப்போது வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். இதனால், மிகவும் கவனத்துடன் இருந்தோம். ஆனாலும் கருத்தரித்து விட்டது. கருத்தரிப்பதைத் தவிர்க்க எது சிறந்த வழி டாக்டர்?. கர்ப்பத்தைத் தவிர்க்கும் மாத்திரைகளை எடுப்பது நல்லது இல்லை என என் தோழி சொல்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை?
டாக்டர் ஞானப்பழம்:
சிறந்த வழிமுறை என்று எதுவும் இல்லை. கருத்தரித்தலைத் தவிர்க்கும் வழிமுறைகள் என்பது தம்பதிகளின் உடல்நிலை, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை, அவரவர் விருப்பம் சார்ந்து முடிவுசெய்ய வேண்டியது. உதாரணத்துக்கு, திருமணம் ஆன புதுமணத் தம்பதிகளுக்கு ஆணுறை அல்லது கர்ப்பத்தைத் தவிர்க்கும் மாத்திரை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது. இதுவே, குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு ஐ.யு.டி அல்லது மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டோம், இனி குழந்தை வேண்டாம் என முடிவுசெய்பவர்களுக்கு அறுவைசிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம்.
இதில் துளியும் உண்மை இல்லை. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் மிகவும் பாதுகாப்பானவை. ஆனால், இதை அவரவர் விருப்பப்படி வாங்கி எடுத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. உங்கள் வைத்தியரை அணுகி ஆலோசனை பெறும்போது, அவர் உங்கள் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு மாத்திரையைப் பரிந்துரைப்பார். எல்லா பெண்களுக்கும் இந்த மாத்திரை பாதுகாப்பானது என்றும் சொல்ல முடியாது. சிலருக்கு ஒவ்வாமை பிரச்னை இருக்கலாம். இவர்களுக்கு இந்த மாத்திரை எடுத்தால், பிரச்னை ஏற்படலாம். எனவே. மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.