பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து நடிகை கல்பிகா கணேஷ் அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகன் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நான் காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவை கடந்த ஜனவரி 23ஆம் திகதி திருமணம் செய்து கொண்டேன்.
இந்நிலையில், வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், எங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூடியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக ரூ.1 கோடி வழங்க கல்பிகா கணேஷ் வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு, வரும் ஜனவரி 20ஆம் திகதிக்குள் கல்பிகா கணேஷ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
முன்னதாக, தான்யா பாலகிருஷ்ணா இயக்குனர் பாலாஜி மோகனை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது திருமணம் செய்ததாக கல்பிகா கணேஷ் தான் முதலில் பகிரங்கப்படுத்தினர்.
தனது யூரியுப்பில் வெளியிட்ட வீடியோவில், தான்யா சென்னைக்கு சென்ற போது பாலாஜி மோகனுடன் தான் இருந்தார் ஆனால் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அந்த அறிமுகம் காதலாக மாறியதால் இருவரும் ரகசிய திருமணம் செய்து கற்பூரம் கூட போட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் தங்கள் உறவைப் பற்றி பேச விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் இவர்களது திருமணம் பற்றி தெரிந்து தான்யா மீது எனக்கு பயமாக இருந்தது, பாலாஜி அவரை சித்ரவதை செய்வார் என நினைத்ததாகவும், ஆனால் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பது தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தை இப்போது சொல்வதற்கு காரணம் இருப்பதாகவும், படத்தின் ப்ரோமோஷனுக்கு தன்யா வருவதில்லை என்றும், இந்த விஷயத்தில் பாலாஜி அவரை தொந்தரவு செய்வதாக உணர்ந்ததாகவும், அதனால் தான் இந்த விஷயத்தை வெளியிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் யூடியூப் சேனலில் தன்யா புகார் அளித்தாரா அல்லது வேறு யாரேனும் புகார் அளித்தாரா என்பது தெரியவில்லை, யூடியூப் சேனலில் அந்த வீடியோவை நீக்கியதையடுத்து இயக்குனர் பாலாஜி அந்த வீடியோவை நீக்கிவிட்டார் என்று கல்பிகா கணேஷ் தற்போது மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இரகசிய திருமண விவகாரத்தை பாலாஜி மோகனும், தான்யாவும் பகிரங்கமாக்கியுள்ளனர்.




