டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 100 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு ராகுல் காந்தியோடு நடந்து சென்றார்.
முன்னதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டிருந்தார்.
சென்னையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா, “டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொள்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகத்தான் இந்த யாத்திரையில் பங்கேற்கிறோம். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அவரது கைப்பட எழுதி அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கானது அல்ல. இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு யாத்திரை” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.