24.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

உலகம் முழுவதும் 20 கொலைகள்; 3 புத்தகங்கள்… ஒரு நெட்பிளிக்ஸ் தொடர்: உலகம் முழுவதும் ஆர்வமாக அறியப்பட்ட சீரியல் கில்லர் 78 வயதில் இன்று விடுதலையாகிறார்!

நேபாளத்தில் இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொலை செய்த வழக்கில் நேபாளத்தில் சிறைவாசம் அனுபவித்து வந்த பிரான்ஸ் தொடர் கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யுமாறு நேபாள உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (20) உத்தரவிட்டது.

சார்லஸ் சோப்ராஜ் இப்பொழுது உலகம் முழுவதும் செய்தியாகியுள்ளார். அவர் உலகம் முழுவதும் 20 இற்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. அனேகமாக பிகினி அணிந்த பெண்களை கொன்றதால், பிகினி கில்லர் (bikini killer) என அழைக்கப்பட்டார்.

78 வயதான அவருக்கு எதிராக வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால் அவரை விடுவிக்கவும் அதன் பிறகு அவரை 15 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சோப்ராஜ் உடல்நலக் காரணங்களுக்காக முன்கூட்டியே விடுதலை செய்ய மனு செய்ததை அடுத்து, பிரெஞ்சு தூதரகம் கூட நேபாள அரசாங்கத்தை அணுகியதாக கூறப்படுகிறது.

அவர் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு, காட்மண்டுவிலுள்ள குடிவரவுத் துறைக்கு காகிதப்பணிக்காக அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்பட்டது.

எனினும், குடிவரவுத் துறையில் முன்பதிவு செய்தவர்கள் அனேகர் உள்ளதால், அவரை வெள்ளிக்கிழமை அழைத்து வருமாறு குடிவரவு அதிகாரிகள் மத்திய சிறை நிர்வாகத்திடம் கோரியதாக, சோப்ராஜின் வழக்கறிஞர் கோபால் சிவகோடி சித்தன் தெரிவித்தார்.

இதனால் நேற்றைய இரவையும் சோப்ராஜ் சிறையில் கழித்தார்.

அவர் வரும் நாட்களில் பிரான்சுக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சிக்கலான குழந்தைப் பருவம்

சார்லஸ் சோப்ராஜை ஏப்ரல் 1944 இல் பிரான்ஸின் ஆக்கிரமிப்பிலிருந்த வியட்நாமின்  சைகோனில் பிறந்தார். ஒரு இந்திய வர்த்தகர் மற்றும் வியட்நாமிய கடை ஊழியரான தாய்க்கு பிறந்தார். தகவல்களின்படி, அவரது பெற்றோருக்கு திருமணம் ஆகவில்லை, சோப்ராஜை அவரது தந்தை ஒருபோதும் தனது மகனாக ஒப்புக் கொள்ளவில்லை.

“அவரது தந்தையின் நிராகரிப்பு இளம் சோப்ராஜில் கணிசமான வெறுப்பையும் கசப்பையும் ஏற்படுத்திய ஒரு செயலாகும்: ‘உங்கள் தந்தையின் கடமையை நீங்கள் தவறவிட்டதற்காக நான் உங்களை வருத்தப்படச் செய்வேன்,’ என்று அவர் தனது நாட்குறிப்பில் கூறினார்,” என்று 2004 இல் வெளியான அவரைப் பற்றிய பிபிசியின் விபரணம் கூறுகிறது.

சிறுவனான சார்லஸ் சோப்ராஜூடன் தாயார் பிரான்சுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் பின்னர் ஒரு பிரெஞ்சுக்காரரை மணந்தார். இருப்பினும், சோப்ராஜ் தனது புதிய குடும்பத்துடன் ஒருபோதும் பொருந்தவில்லை. கைவிடப்பட்டதற்காக அவரது தந்தை மீது தீராத வெறுப்பிலிருந்தார்.

சிறுவயதிலிருந்தே, குற்றங்களில் ஈடுபட்டு சிறிய குற்றங்களுக்காக பிரான்சில் பல சிறைகளில் இருந்தார்.

1970 களின் முற்பகுதியில், அவர் உலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார். ஐரோப்பாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையான “ஹிப்பி பாதை” என்று அழைக்கப்படும் வழித்தடத்தில் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தார். அவர் பானங்களில் மயக்க மருந்தூட்டி கொள்ளையிட்டது, பெண்களை கூட்டாளிகளாக்கி கொலை செய்தது என குற்றங்களில் ஈடுபட்டார்.  1970கள் மற்றும் 1980களில், அவர் குறைந்தது 15 முதல் 20 பேரைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

1970 களின் நடுப்பகுதியில், பாட்டாயாவில் உள்ள கடற்கரையில் பிகினி அணிந்த குறைந்தது ஆறு பெண்களை போதைப்பொருள் கொடுத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, தாய்லாந்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. பிகினி அணிந்த பெண்களை கொன்றதன் மூலம், “பிகினி கொலையாளி” (bikini killer) என்ற அடையாளத்தை சம்பாதித்துக்கொண்டார்.

இருப்பினும், அவர் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டதால் அந்தக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை.

சோப்ராஜ் 1975 இல் பாங்காக்கிற்கு குடிபெயர்ந்தபோது நட்பாகப் பழகிய நாடின் கிரெஸ், கடந்த ஆண்டு AFP க்கு அளித்த பேட்டியில்,  “அவர் ஒரு மோசடி செய்பவர், மயக்குபவர், ஒரு சுற்றுலாப் பயணிகளைக் கொள்ளையடிப்பவன்,  ஒரு தீய கொலைகாரன்“ என விபரித்திருந்தார்.

ரத்தினக் கல் வியாபாரியாக மாறுவேடமிட்டு, போதைப்பொருள் கொடுத்து, கொள்ளையடித்து, கொலை செய்வதாக சோப்ராஜ் பற்றிய தகவலையறிந்த பின், அவரை நினைத்து அஞ்சியதாக குறிப்பிட்டார்.

சோப்ராஜ் மந்நவர்களை வசீகரித்து நட்பாகப் பழகுவார் என்றும், அவர்களைக் கொன்ற பிறகு அவர்களது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அடுத்த இடத்திற்குச் செல்வதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கைது

அவர் பலமுறை பல நாடுகளில் கைது செய்யப்பட்டார். ஆனால் இலஞ்சம் கொடுத்து அங்கிருந்து தப்பித்தார் அல்லது சிறைகளில் சொகுசாக வாழ்ந்தார்.

1976 ஆம் ஆண்டில், சோப்ராஜ் இந்தியாவில் கைது செய்யப்பட்டார், அவரும் அவரது மூன்று கூட்டாளிகளும் சில பிரெஞ்சு மாணவர்களிற்கு வழிகாட்டியாக செயற்படுவதாக கூறி, அவர்களுக்கு விஷம் கலந்த மாத்திரைகள் கொடுத்தனர்.

பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இருப்பினும், சோப்ராஜின் தண்டனைக் காலம் முடியும் தருவாயில், 1986 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்தார்.

தனது “பிறந்தநாள் பரிசு” என குறிப்பிட்டு சிறைக் காவலர்களுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்புகளை அளித்துவிட்டு, உயர் பாதுகாப்பு திகார் சிறையில் இருந்து அவர் தப்பினார்.

சுமார் 20 நாட்களுக்குப் பிறகு கோவாவில் பிடிபட்டு, மீண்டும் திகாருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறையிலிருந்து தப்பியது, காவலர்களிற்கு போதையூட்டிய குற்றச்சாட்டுக்களில் 1997 வரை சிறையில் இருந்தார். தண்டனைக்குப் பிறகு, சோப்ராஜ் பாரிஸுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

சிறைத்தண்டனை முடியும் தறுவாயில் அவர் சிறையிலிருந்து தப்பியது, அவர் வேண்டுமென்றே செய்த குற்றம் என ஊகிக்கப்படுகிறது. தனது 10 ஆண்டு சிறைத்தண்டனை முடிவில் தப்பித்தார். தான் மீண்டும் கைது செய்யப்படுவேன், புதிய குற்றச்சாட்டுக்களின் கீழ் மேலும் தடுத்து வைக்கப்படுவேன் என தெரிந்தே, தப்பித்துள்ளார். தாய்லாந்திடம் தான் ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவில் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகவே சிறையிலிருந்து தப்பித்ததாக கருதப்படுகிறது.

அவர் நேபாளத்தில் எப்படி வந்தார்?

2003 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் தோன்றி, நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 1975 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கரான கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்ததற்காக கூறபப்டும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

அறிக்கைகளின்படி, 1975 இல் ப்ரொன்சிச்சின் உடல் தலைநகர் அருகிலுள்ள கோதுமை வயலில் கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், சோப்ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார், அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர்கள் அவர் மீதான குற்றச்சாட்டு ஒரு அனுமானத்தின் அடிப்படையிலானது என்று கூறினார்.

பல வருடங்கள் கழித்து அவர் ப்ரோன்சிச்சின் கனேடிய நண்பரான லாரன்ட் கேரியரைக் கொன்றதற்காகவும் தண்டிக்கப்பட்டார்.

காத்மாண்டுவின் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

2008 ஆம் ஆண்டில், சோப்ராஜ் நிஹிதா பிஸ்வாஸை மணந்தார்,. சோப்ராஜை விட நிஹிதா 44 வயது இளையவர் என்றும், அவரது நேபாள வழக்கறிஞரின் மகள் என்றும் கூறப்படுகிறது.

அவரது 20 ஆண்டு சிறைத்தண்டனையில் 19 ஆண்டுகளை கழித்து விட்டார்.

புதன்கிழமை, நேபாள உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் சபனா பிரதான் மல்லா மற்றும் டில் பிரசாத் ஷ்ரேஸ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறியது.

2017 ஆம் ஆண்டில், சோப்ராஜுக்கும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

“அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு பொருந்தாது. அவரை சிறையில் அடைக்க அவருக்கு எதிராக வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், இந்த நீதிமன்றம் அவரை இன்றைக்குள் விடுவிக்கவும் … 15 நாட்களுக்குள் அவர் நாட்டிற்கு திரும்பவும் உத்தரவிடுகிறது.” என தீர்ப்பளிக்கப்பட்டது.

“சிறை நிர்வாக ஒழுங்குமுறை 75 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் சிறைத்தண்டனையில் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படுவதையும் நல்ல நடத்தையையும் கொண்டுள்ளது” என்று  தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சட்டம் 2063 இன் ஷரத்து 12 (1)  மூத்த குடிமக்கள் 75 வயதை பூர்த்தி செய்தவர்களில் 75 சதவீதத்திற்கு மிகாமல் தண்டனையை தள்ளுபடி செய்யலாம் என்று கூறுகிறது. .

சோப்ராஜின் கதை பலரை கவர்ந்துள்ளது, கடந்த ஆண்டு, பிபிசி மற்றும் நெட்ஃபிக்ஸ் இணைந்து அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எட்டு எபிசோட் மினி-சீரிஸை த சர்ப்பன் என்று பெயரில் வெளியிட்டனர்.

சோப்ராஜின் வாழ்க்கை, குற்றங்களை பற்றி 3 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. “Life and Crimes of Charles Sobhraj” (1979), “On the Trail of the Serpent: The Epic Hunt for the Bikini Killer” (2021) ஆகியன அவற்றில் இரண்டு புத்தகங்களாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

Leave a Comment