ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை தமிழ்பக்கத்திற்கு இது தொடர்பில் அவர் தெரிவித்தார்.
ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியதாக க.வி.விக்னேஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து எமது சார்பில் ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம் என க.வி.விக்னேஸ்வரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, வரும் ஜனவரி 5ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.