குடிபோதையில் வன்முறையில் ஈடுபட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ரக்வான உடஹவீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ரக்வான பொலிஸார் தெரிவித்தனர்.
டிசம்பர் 19 ஆம் திகதி பிரதேசவாசி ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சிறுமி கைதானார்.
பொலிசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சிறுமி அக்கம்பக்கத்தினர் மீது கற்களை வீசி எறிந்ததையும், தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் கண்டனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது அத்தையையும் அவர் தாக்கியுள்ளார்.
ரக்வானவில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சிறுமி, கைது செய்யப்பட்ட போது மது அல்லது போதைப்பொருளை உட்கொண்டு போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலில் ரக்வான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக கஹவத்தை வைத்தியசாலை வைத்தியர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தை கருத்தில் கொண்டு, பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.