மின் கட்டணத்தை திருத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமோ அல்லது பிரேரணையோ நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையொன்று அமைச்சரவைக்கு முன்மொழியப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பான யோசனையொன்றை அமைச்சர் முன்வைக்கவில்லை.
இதேவேளை, ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட இது போதாது எனவும், எனவே கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த மாதம் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களின் கீழ் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டதாக மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.