அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வென்ற கப்டன் லியோனல் மெஸ்ஸி, தனது நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவதாக உறுதியளித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய பரிசை வெல்லும் அவரது வாழ்நாள் இலட்சியத்தை எட்டிய பின்னர் இதனை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சுக்கு எதிராக ஒரு காவிய பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து 35 வயதான மெஸ்ஸி அர்ஜென்டினா தொலைக்காட்சியிடம் கூறினார்: “இன்னும் சில போட்டிகளை உலக சாம்பியனாக அனுபவிக்க விரும்புகிறேன்“ என.
“எனது தொழில் வாழ்க்கையில் ஒவ்வொரு கிண்ணத்தையும் வெல்ல நான் அதிர்ஷ்டசாலி. நான் இப்பொழுது உலககிண்ணத்தை அர்ஜென்டினாவுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன், மற்ற அனைவருடனும் அதை அனுபவிக்க விரும்புகிறேன்.” என்றார்.
மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு 23 வது நிமிட பெனால்ட்டி கோல் பெற்றுக்கொடுத்தார்.நேற்றைய இறுதிப் போட்டியின் முதல் கோல் அது. பின்னர், 108 வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 3-2 என அணியை முன்னிலைக்கு எடுத்து சென்றார்.
பிரான்சின் 23 வயதான சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே தனது ஹட்ரிக் கோல் மூலம் ஆட்டத்தை சமனிலைப்படுத்தி, பெனால்ட்டி ஷூட்-அவுட்டுக்கு கொண்டு சென்றார்ர்.
சமகால கால்பந்தின் மிகப் பெரிய வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, கட்டாரில் நடந்த போட்டி தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.