இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனத்திற்கு முன்னதாக, ஜனாதிபதி விக்ரமசிங்க, ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தினார்.
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பதவி உயர்வுக்கு முன்னர் கடற்படையின் பிரதானியாக இருந்தார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 1987 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 05 வது அணியில் கடட் தர அதிகாரியாக கடற்படையில் சேர்ந்தார்.
இதேவேளை, இலங்கை கடற்படையின் 24வது தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து கடற்படைத் தளபதி பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அவர் 2020 ஜூலை 15 ஆம் திகதி கடற்படையின் 24 வது தளபதியாக பதவியேற்றார்.
ஓய்வுபெறும் கடற்படைத் தளபதி, கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கட்டளைத் தளபதி அலுவலகத்தில் புதிய தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடமைகளை ஒப்படைத்தார்.
அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 37 வருடங்களுக்கும் மேலாக கடற்படையில் சேவையாற்றினார்.
ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு கடற்படை மரபுகளின்படி மரியாதை செலுத்தப்பட்டது.