சொந்த மகளை மது போதையில் பாலியல் வல்லுறவு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (15) 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
மகளையே பாலியல் வல்லுறவு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் வீட்டில் இல்லாதபோது மதுபோதையில் வந்து தன்னைப் பாலியல் வல்லுறவு புரிந்ததாகத் தனது தந்தை மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். வவுனியா நீதவானின் உத்தரவின்பேரில் கடந்த 6 மாத காலமாக சிறுவர் இல்லமொன்றில் வசித்து வருவதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி கன்னிச்சவ்வு சிதைவடைந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். சிறுமி 11 வயதுடையவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவரது பிறப்பத்தாட்சிப் பத்திரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிறுமியின் சாட்சியத்தை சட்ட வைத்திய அறிக்கை ஒப்புறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதி இளங்செழியன் எதிரியைக் குற்றவாளி எனக் குறிப்பிட்டு 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கியதுடன், சிறுமிக்கு 3 லட்ச ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் 15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறும் பட்சத்தில் 9 மாதக் கடூழியச் சிறையும், தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 3 மாத கால சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் தரப்பில் அரச சட்டவாதி செஸான் மஃப் வழக்கை நெறிப்படுத்தினார்.