30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் ஆளுநரிடம் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். பின்னர் தலைமைச் செயலர் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் உதயநிதிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் பதவியேற்பு உறுதிமொழியில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். ஆளுநரும் கையொப்பமிட்டார். மலர் கொத்து வழங்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், அதிகாரிகள், உதயநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவிப் பிரமாணம் முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட உதயநிதி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு தலைமைச் செயலகம் சென்று அங்கு காலை 10.15 மணிக்கு அவரது அறையில், அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

உதயநிதி ட்வீட்: முன்னதாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’ – உச்ச நீதிமன்றம்

Pagetamil

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!