இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு முன்னோடியாக சர்வகட்சி கூட்டத்தை ஜனாதிபதி இன்று அழைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று (13) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க சகல தரப்பினருடனும் தான் பேச தயாராக உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி, இன்று சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய சந்திப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்துள்ளது.
சமஸ்டி அடிப்படையிலான தீர்வு பற்றி ஜனாதிபதி முதலில் சிங்கள மக்களுடன் பேச வேண்டும், அப்படி செய்யாமல் தீர்வுக்கான பேச்சிற்கு வாருங்கள் என ஜனாதிபதி அழைப்பது, பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் நகர்வுகளில் ஒன்று, தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.
இன்றைய சந்திப்பிற்கு முன்னோடியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 அங்கத்துவ கட்சிகளுடனும் ஜனாதிபதி தனித்தனியாக பேச்சு நடத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் கடந்த 11ஆம் திகதி நடந்த போதும், ஜனாதிபதியின் முயற்சி பற்றி அவநம்பிக்கை வெளியிடப்பட்டது. தற்போதைய பேச்சு முயற்சிகள் பற்றி விளக்கமளித்த எம்.ஏ.சுமந்திரன், தற்போதைய முன்னெடுப்பில் நம்பிக்கையில்லா விட்டாலும், பேச்சில் கலந்து கொண்டு முயற்சித்து பார்ப்போம் என தெரிவித்திருந்தார்.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சி பற்றி சர்வகட்சிகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி இன்று தெரிவித்து, அவர்களின் சம்மதத்தையும், அபிப்பிராயத்தையும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இனப்பிரச்சினை தீர்வில் மூன்றாம் தரப்பு நாடொன்றின் மத்தியஸ்தம் பற்றி முன்னெப்பொழுதும் இல்லாதளவில் தமிழ் அரசியல் கட்சிகளால் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வலியுறுத்தியுள்ளன.
க.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் மத்தியஸ்தத்தை பகிரங்கமாக கோரியிருந்தார். அவரது கூட்டணியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நிலைப்பாடும் அதுதான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளியான ரெலோவும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவிக்காவிட்டாலும், தமிழ் அரசு கட்சி கூட்டங்களின் பின்னர் உத்தியொகபூர்வமாக கருத்து தெரிவிக்கும் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி யாழில் நடந்த சந்திப்பொன்றில் மூன்றாம் தரப்பு மத்தியத்தத்தை கோரினார். ஆனால் இலங்கையில் நலன்களை கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அல்லாமல், இலங்கையில் நலன்களில்லாத நாடுகளே மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென்றார்.
இன்று ஜனாதிபதியுடனான சந்திப்பில், இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதா என்பதை ஆராய, பிரதான தமிழ் கட்சிகள் இன்று காலை இரா.சம்பந்தனின் வீட்டில் கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அரசு நிராகரிக்கும் என்ற போதும், அதை முன்வைப்பது நமது கடமையென கூட்டமைப்பு வட்டாரங்கள் நேற்றிரவு தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.
எனினும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றி அரச தரப்பிடம் அறிவிக்க முன்னர் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் நாம் பேச்சு நடத்த வேண்டும். இந்தியாவுடன் இது பற்றி பேசிவிட்டு, அரச தரப்பிடம் அறிவிப்பதே பொருத்தமானது. இந்திய மத்தியஸ்தம் பற்றி வலியுறுத்திய சக தமிழ் தரப்புக்களிடம் அது பற்றி கூறியிருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.