குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அளித்த மக்களின் முன்பு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தல் வெற்றியை அந்த மாநில பாஜக தலைவர்கள், தொண்டர்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குஜராத் தேர்தல் வெற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குஜராத்தில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் தேர்தலை நேர்மையாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. ஒரு வாக்குச்சாவடியில் கூடமறுவாக்குப்பதிவு நடைபெறவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிஹார், உத்தர பிரதேசம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களித்தனர்.
இன்றைய இளைஞர்கள் பாஜகவின் வளர்ச்சி திட்டங்களை விரும்புகின்றனர். ஜாதி அரசியல், வாரிசுஅரசியலை அவர்கள் விரும்பவில்லை. அதனால் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் பாஜக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதன்காரணமாக வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது.
காங்கிரஸின் ஊழல் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் ஊழலற்ற பாஜக ஆட்சியை விரும்புகின்றனர். பாஜக ஆட்சியில் ஏழைகள், நடுத்தர வகுப்பு மக்கள் எனஅனைத்து தரப்பினரும் முன்னேறுகின்றனர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. அந்த சாதனைகளை தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் முறியடிப்பார். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று மக்களிடம் கூறினேன்.
பாஜக மீது நம்பிக்கை வைத்து குஜராத் மக்கள் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். குஜராத் வரலாற்றில் பாஜக புதிய வரலாறு படைத்திருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆனாலும் பாஜக மீதான மக்களின் அன்பு குறையவில்லை. பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களால் பலன் அடைந்த பெண்கள் ஆட்சி தொடரஆதரவளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
டெல்லி மாநகராட்சி, இமாச்சலபிரதேசம் மற்றும் இடைத்தேர்தல்களிலும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் கட்சியின் வாக்கு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. இதுபாஜக மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம். எனினும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
குஜராத்துக்கு நன்றி. தேர்தல் முடிவுகளால் நெகிழ்ச்சி அடைந்துஉள்ளேன். வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். தற்போதைய பாஜக ஆட்சி தொடர அவர்கள் விரும்புகின்றனர். குஜராத் மக்கள் முன்பாக தலைவணங்குகிறேன். வரலாறு காணாத தேர்தல் வெற்றிக்காக உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.