உறவுகள் மற்றும் நண்பர்களிற்கிடையில் சில பிரச்சினைகள் ஏன் ஆரம்பிக்கிறது என்பதே தெரியாமல் சில்லறை பிரச்சினைகளிற்காக எல்லாம் ஆரம்பிக்கும். உதாரணமாக, ஏதாவது அழைப்பிதழில் அல்லது அறிவிப்பில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லையென்பதற்காக எல்லாம் பலர் உறவுகளை முறித்துக் கொண்டிருப்பார்கள்.
இதை ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி நாயகன் வடிவேலுவின் ஒரு காட்சியில், “நானும் ரௌடிதான் சார்… என்னையும் ஜீப்பில் ஏற்றிச் செல்லுங்கள். இல்லாவிட்டால் ஊருக்குள் மதிக்க மாட்டார்கள்“ என அடம்பிடிப்பார்.
இந்த “நானும் ரௌடிதான்“ டயலொக்கிற்கும், ஆரம்பத்தில் குறிப்பிட்ட அழைப்பிதழில் பெயர் குறிப்பிடாமல் விடுவதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டையும் ஏன் குறிப்பிட்டோம் என குழம்புகிறீர்களா?
காரணம் உள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களையும் சேர்த்து செய்துள்ளார் அமெரிக்கர் ஒருவர். அதனால் இப்பொழுது கம்பி எண்ணி வருகிறார்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா பொலிசார் வெளியிட்ட, அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தனது பெயர் இல்லையென குறிப்பிட்ட ரௌடியொருவரை பொலிசார் அள்ளிச் சென்றுள்ளனர்.
அந்த சுவாரஸ்ய சம்பவம் இதுதான்.
ஜோர்ஜியா மாகாணத்தின் Rockdale County Sheriff’s Office அவர்களின் முகநூல் பக்கத்தில் மிகவும் தேடப்படும் முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலை அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டது.
கிறிஸ்டோபர் ஸ்பால்டிங் என்ற ரௌடி அதனை பார்த்து கொந்தளித்து விட்டார். ஊரில் இத்தனை வருடமாக ரௌடியாக இருந்தாலும், முதல் 10 ரௌடிகளின் பட்டியலில் என்னை சேர்க்காமல் இன்சல்ட் பண்ணி விட்டார்களே என கொதித்துப் போனவர், Rockdale County Sheriff’s Office இன் பேஸ்புக் பதிவின் கீழே “இதில் நான் எங்கே இருக்கிறேன்?” என கோபமாக பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த அதிகாரிகள், “நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்கு எதிராக இரண்டு வாரண்டுகள் உள்ளன. நாங்கள் உங்களைப் பிடிக்கத் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்ததுடன், கிறிஸ்டோபரை கைது செய்தனர்
கிறிஸ்டோபருக்கு சில விதிமீறல் வழக்குகள் மட்டுமே உள்ளன. அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, மோசமான தாக்குதல் மற்றும் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். அதனால்தான் கிறிஸ்டோபரின் பெயர் அதில் இல்லை.
நானும் ரௌடிதான் பாணியில் சிறை சென்ற கிறிஸ்டோபர் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Rockdale County Sheriff’s Office இன் பேஸ்புக் பதிவை பார்க்க இங்கு அழுத்துங்கள்