கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
ஓர் அறப் போராட்டம் என்ன செய்யும் என்பதற்கு விளக்கமாகி நிற்கின்றனர் ஈரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் . ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
சட்டமா அதிபர் முகமது ஜஃபார் மோன்டசாரி ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மத மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கலாச்சார காவலர்கள் ஒன்றும் நீதித்துறையையும்விட உயர்ந்தவர்கள் அல்ல. அதனால் அந்தப் பிரிவை ரத்து செய்துள்ளோம்” என்றார்.
பெண்களின் ஆடை விஷயத்தை கண்காணிக்கும் இந்தப் படைப்பிரிவு 2006ஆம் ஆண்டு அதிபர் மகமூத் அகமதுநிஜாத் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக் குழுவின் முக்கிய வேலையே பெண்கள் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களின்படி ஆடை அணிகிறார்களா? குறிப்பாக ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிப்பதே.
1979 புரட்சிக்கு அமெரிக்க ஆதரவு முடியாட்சியைத் தூக்கியெறிந்து ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிறுவியது. புரட்சிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், அவரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பொலிஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் விளையாட கத்தார் சென்ற ஈரான் அணியினர் தங்கள் நாட்டில் ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவாக தேசிய கீதம் பாடுவதை புறக்கணித்தனர். இந்நிலையில் தான் ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக அட்டர்னி ஜெனரல் நேற்று தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த சட்டத்திருத்தம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த புதன் கிழமையன்று ஆய்வுக் குழு ஒன்று நாடாளுமன்ற கலாச்சார குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது ஒன்றிரண்டு வாரங்களில் அதன் முடிவு தெரியவரும் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் கலாச்சார காவல் பிரிவை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.