உரிய முறையில் பாராளுமன்ற, அமைச்சரவை நடைமுறைகளைக் கையாண்டு பெற்றுக் கொள்ளப்பட்ட நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்பட்டுள்ள பாரபட்சத்துக்கு எதிராக இதுவரை பாராளுமன்றத்தில் உரிய வகையில் யாருமே குரல் எழுப்பவல்லை என்பதோடு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை எடுத்துரைக்குமாறும் கோரிய மனுவை மலையக அரசியல் அரங்கம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளித்துள்ளது என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (28/11) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த கோரிக்கை மனு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் எம்பி திலகர் தெரவித்துள்ளதாவது,
மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இந்த நாட்டில் இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய அநீதி பொது நிர்வாக சேவையில் இருந்து தூரமாக்கப்பட்டுள்ளமையாகும். அவர்களுக்கு உரிய முறையில் கிராம உத்தியோகத்தர் சேவை பிரிவுகள், பிரதேச செலகங்கள் சேவைகள் கிடைப்பதில்லை. ஒட்டுமொத்த மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்பட்ட போதும் நுவரலியா மாவட்டத்தில் இந்த நிலைமை மிகவும் மோசமானதாகும்.
இந்தப் பிரச்சினை குறித்து விரிவான ஒரு பிரேரணையைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து இருந்ததோடு அது அமைச்சரவையிலும் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது. அந்த வர்த்தமானியில் காலி, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு புதிய பிரதேச செயலகங்கள் பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதும் அதனை நடைமுறைப் படுத்தும்போது காலி, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முழுமையான பிரதேச செயலகங்களாகவும் நுவரெலியா மாவட்டத்தில் உப செயலகமாகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை பாரியதொரு பாரபட்சமாகும். இந்த பாரபட்சம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரிய முறையிலே கேள்வி – பதில் நேரத்திற்குத் பாராளுமன்றத்திலே துறைசார்ந்த அமைச்சருக்கு ஒரு கேள்வியை முன்வைத்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
ஆனாலும் இந்த உரிமை மீறப்பட்டு இரண்டு வருடங்களாகியும் இன்னும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக அப்படி ஒரு விடயத்தை நாங்கள் பாராளுமன்றத்தில் அவதானிக்க முடியவில்லை.
எனவே பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற வகையில் சஜித் பிரேமதாச தனக்கு உள்ள கேள்வி நேர அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றில் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பிலே கேள்வி எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன் குறித்த விவகாரம் தொடர்பான தெளிவான விளக்கம் அளிக்கும் மனுவையும் கையளித்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.