உலகக் கோப்பை கால்பாந்தாட்ட போட்டியில் மெக்சிகோவை 2- 0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றிக் கொண்டது.
கட்டாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சி பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா – மெக்சிகோ அணிகள் நேற்று மோதின. முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா, சவுதியுடன் தோல்வி அடைந்ததால் அந்த அணிக்கு மெக்சிகோவுடனான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன.
இந்த நிலையில் முதல் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ – அர்ஜெண்டினா அணிகள் கோல் அடிக்கவில்லை. எனினும், இரண்டாவது பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் அடித்தது.
ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். பின்னர் 87 -வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பெர்னான்டெஸ் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் 2- 0 என்ற கணக்கில் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை அர்ஜெண்டினா பதிவுச் செய்தது.
சவுதியுடனான ஆட்டத்தில் மெஸ்ஸியின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் மெக்சிகோவுடனான ஆட்டத்தில் தனது அணியை முன்னின்று வழி நடத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் மெஸ்ஸி.