பிரேசில் வீரர்கள் நெய்மர் மற்றும் டானிலோ ஆகியோர் காயம் காரணமாக அடுத்த குரூப் நிலை ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார்கள் என அணியின் மருத்துவர் வெள்ளிக்கிழமை தெரிவித்jதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை செர்பியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் 2-0 என வெற்றியீட்டியது. இதில் பிரேசிலின் நெய்மர், டானிலோ காயமடைந்தனர்.
செர்பிய அணியினர் நெய்மரை முடக்கும் உத்தியை கையாண்டனர். செர்பியா செய்த 12 ஃபவுல்களில், 9 ஃபவுல்கள் நெய்மருக்கு எதிரானவை.
இதனால், ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்கள் இருந்த போது, அவர் கணுக்காலில் காயமடைந்து, போட்டியிலிருந்து வெளியேறினார்..
“வெள்ளிக்கிழமை மதியம் நெய்மர் மற்றும் டானிலோ எம்ஆர்ஐ பரிசோதனைக்கு சென்றனர், அவர்கள் இருவரின் கணுக்காலிலும் தசைநார் பாதிப்பை நாங்கள் கண்டோம்,” என்று அணியின் மருத்துவர் கூறினார்.
இதையடுத்து, பிரேசிலின் மீதமுள்ள இரண்டு உலகக் கோப்பை குரூப் ஆட்டங்களிலும் இருவரும் பங்குகொள்ள மாட்டார்கள்.
எனினும், நொக்அவுட் சுற்றில் கலமிறங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரேசில் அணியின் நட்சத்திரம் நெய்மர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில்,
“பிரேசிலின் சீருடை அணிவதைப் பற்றி நான் உணரும் பெருமையும் அன்பும் விவரிக்க முடியாதது. பிறப்பதற்கு ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்க கடவுள் எனக்கு வாய்ப்பளித்திருந்தால், அது பிரேசிலாக இருக்கும்.
எனது வாழ்க்கையில் எதுவும் கொடுக்கப்படவில்லை அல்லது எளிதாக கிடைக்கவில்லை. நான் எப்போதும் என் கனவுகள் மற்றும் எனது இலக்குகளை துரத்த வேண்டும். ஒருவருக்கு தீங்கு செய்ய விரும்புவதில்லை, ஆனால் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்.
இன்று எனது தொழில் வாழ்க்கையின் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது… மீண்டும் ஒரு உலகக் கோப்பையில். எனக்கு காயம் உள்ளது ஆம், அது எரிச்சலூட்டுகிறது, அது வலிக்கப் போகிறது, ஆனால் நான் திரும்பி வருவதற்கான வாய்ப்பு நிச்சயம். எனது நாட்டிற்கும், எனது தோழர்களுக்கும், எனக்கும் உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.” என பதிவிட்டுள்ளார்.