கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவுக்கும் காதல் மலர்ந்தது. நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், தெலுங்கு வாய்ப்புகள் அதிகமாக வந்ததால், திருமணம் செய்து கொள்வதில் இருந்து விலகினார் ராஷ்மிகா. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இப்போது அவர், தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தான் அறிமுகமான ‘கிரிக் பார்ட்டி’ குறித்து பேசியுள்ளார். அப்போது, அதன் தயாரிப்பு நிறுவனமான ரக்ஷித் ஷெட்டியின் பரம்வா ஸ்டூடியோஸ் நிறுவனத்தை அவர் குறிப்பிடாமல் தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னை வளர்த்த கன்னட சினிமாவை அவர் அவமதித்துவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு கன்னடர்கள் அவர் திரைப்படத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் படங்களுக்கு கர்நாடகாவில் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
அதே நேரம் கன்னட திரைத்துறையினரும் திரையரங்க உரிமையாளர்களும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் நடித்து வரும் ‘வாரிசு’, ‘புஷ்பா 2’ படங்களுக்கு கர்நாடகாவில் சிக்கல் எழலாம் என்று கூறப்படுகிறது.