மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (24) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் வாபஸ் பெற்றுள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் தின ஒழுங்கமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 27 திகதி ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (24) மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை நேற்றைய தினம் வழங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக் கிழமை குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் கை வாங்கியுள்ளதாக சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தாயக பகுதிகளில் உள்ள மாவீரர்களுடைய கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டு அங்கே திருத்த வேலைகள் இடம் பெற்று வந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திருத்தப்பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் மாவீரர் தினத்தை எதிர்வரும் தினங்களில் மன்னார் பிரதேச மக்கள் அனுஷ்டிக்க இருப்பதாகவும் இவ்வாறு பிரதேச மக்கள் இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது மீண்டும் ஒரு இனக்கலவரம் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இடம் பெறலாம் என்றும் எனவே அதற்கு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நேற்றைய தினம் (24) அடம்பன் பொலிசாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை இன் பிரிவு 106 பிரகாரம் குறித்த வழக்கை ஏற்ற மன்னார் நீதவான் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உற்பட 6 நபர்களின் பெயரை குறிப்பிட்டு இடைக்கால தடை ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அடம்பன் பொலிஸ் பொறுப்பதிகாரி இணைந்து நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து குறித்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு தளர்த்த பட்டுள்ளதாக சட்டத்தரணி டினேசன் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் குறித்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக இவ்வழக்கு இம்மாதம் 30ம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.