2022 கட்டார் உலகக்கோப்பை தொடரின் குரூப் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த டென்மார்க்-துனிசியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
அல் ரய்யானில் உள்ள எடிஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
கடந்த 2021 ஜூனில் நடைபெற்ற யூரோ கோப்பைத் தொடரில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அசைவற்று கிடந்த அவரை முதலுதவி சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர் மருத்துவ உதவியாளர்கள். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் மீண்டும் களம் கண்டுள்ளார்.
சுமார் 528 நாட்களுக்கு பிறகு அவர் பங்கேற்று விளையாடும் போட்டி என்பதால் அவருக்கு நேற்றையப் போட்டி மிக முக்கிய போட்டியாக அமைந்தது.
கடந்த ஆண்டு பின்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை தொடரின் லீக் போட்டியில் அவர் பந்தை பாஸ் செய்ய முயன்றபோது மயங்கி விழுந்தார். அவர் மாரடைப்பு காரணமாக நிலை குலைந்து விழுந்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அவர் களம் திரும்பியது கவனிக்கத்தக்கது.
துனீசியாவுக்கு எதிரான போட்டியில் டென்மார்க் அணிக்கு கிடைத்த கோர்னர் வாய்ப்புகளை எரிக்சன் தான் எடுத்திருந்தார். டென்மார்க் நாட்டின் இன்ஸ்பிரேஷன்களில் எரிக்சன் ஒருவர் என அந்த அணியின் கப்டன் சைமன் தெரிவித்துள்ளார்.
போட்டியின் 95வது நிமிடத்தில் துனிசியாவின் யாசின் மெர்ரியாவின் கையில் பந்துபட்டதாக குறிப்பிட்டு, டென்மார்க் அணியினர் பொனால்ட்டி வாய்ப்பு கேட்டனர். எனினும், நடுவர் சீசர் ராமோஸ் அதை நிராகரித்தார். இதனால் டென்மார்க் அணியினர் அதிருப்தியடைந்திருந்தனர்.
இதேபோல, டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்னின் கையில் பந்து பட்டதாக துனிசியா கோரிய பெனால்ட்டி வாய்ப்பையும் நிராகரித்தார்.