விபத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரியை நடுவீதியில் தாக்கி அவரது கை உடைக்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் ஏ-9 வீதியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து நேர்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து, காரை செலுத்தி வந்த தனியார் வங்கி ஒன்றின் அதிகாரி தாக்கப்பட்டார்.
விபத்து நடந்ததும், வங்கி அதிகாரி நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அளித்து காயமடைந்தவரை அனுப்பி வைத்ததுடன் பொலிசார் வரும்வரை காரை நகர்த்தாமல் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதற்கிடையில் அங்கு வந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். தலைக்கவசத்தால் வங்கி அதிகாரியை தாக்கினர். அந்த காரில் பயணித்தவர்களையும் தாக்கி, காருக்கும் சேதம் ஏற்படுத்தினர்.
அந்த பகுதியால் சென்ற சிறப்பு அதிரடிப் படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி, ஒருவரை தமது கட்டுப்பாட்டில் வைத்தனர். மற்றொருவர் தப்பிச் சென்றார்.
அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தவர், பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தாக்கப்பட்ட வங்கி அதிகாரி கையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபகுதியில், சில மாதங்களின் முன் வாகன விபத்தொன்றை தொடர்ந்து, பேருந்து ஒன்று தீவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.