மினுவாங்கொட, சம்ருத்திகம பிரதேசத்தில் தெதுறு ஓயாவின் கிளை ஒன்றில் காதல் ஜோடியொன்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
பாலமொன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று அநாதரவாக நிற்பது நேற்று முன்தினம் (19) அவதானிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஜோடியொன்று, ஆற்றில் குதித்தது தெரிய வந்தது.
நேற்று (20) காலை யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை யத்தியானை பகுதியைச் சேர்ந்த 25 வயதான கே. லக்ஷானி தில்மிகா கீர்த்திரத்ன என்ற யுவதியின் சடலமே மீட்கப்பட்டது.
சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர், உயிரிழந்த யுவதி யத்தியானவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, நடகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவருடன் வசித்து வந்துள்ளார்.
யுவதியின் மரணம் தொடர்பில் நேற்று (20) பிற்பகல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சடலத்தை அவதானித்த மரண விசாரணை அதிகாரி சடலத்தை வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறு மினுவாங்கொடை பொலிஸாருக்கு பணித்தார்.
மினுவாங்கொடை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் குழுவினர் படகுகளை பயன்படுத்தி இளைஞனின் சடலத்தை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.