தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆலயங்களில் பழமரச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பழமுதிர்ச்சோலை என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நேற்று ஞாயிற்றுக் கிழமை (20) வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியிலுள்ள ஆலயங்களில் பழமரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேவில் முத்துமாரியம்மன் ஆலயம், வேதக்குளம் மயிலிய வைரவர் ஆலயம், உணவத்தை கண்ணகை அம்மன் கோவில், வெற்றிலைக்கேணி செல்வவிநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களின் அறங்காவல் குழுவினரிடம் பழமரக்கன்றுகளைக் கையளித்ததோடு பழமரக்கன்றுகளை நாட்டியும் வைத்தார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மரநடுகை மாதத்தை முன்னிட்டுக் கார்த்திகை வாசம் என்ற மலர்க்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் முறையாகப் பராமரிக்கக்கூடிய ஆலயங்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பழமரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.