தாய்லாந்தில் ஒருவருக்கு அதிர்ஸ்டலாப சீட்டிழுப்பில் 6 மில்லியன் பாட் பணப்பரிசில் கிட்டியது. இவ்வளவு பெருந்தொகை பணம் கிடைத்ததால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு.
அவரது மனைவி அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்று விட்டார். இப்போது, அந்த மனிதன் அன்றாட செலவிற்கும் பணமில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.
இசான் மாகாணத்தை சேர்ந்த 49 வயதான மனித் என்பவருக்கு நவம்பர் 1 ஆம் திகதி, அதிர்ஸ்டலாப சீட்டிழுப்பில் முதல் பரிசு கிடைத்தது. அவருக்கு 6 மில்லியன் பாட் பணம் கிடைத்தது.
அரச வரிகள் செலுத்தப்பட்ட பின்னர், 5,970,000 பாட் அவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.
இந்தப் பணத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என மனித் திட்டமிட்டுக் கொண்டிருக்க, அவரது 45 வயது மனைவி அங்கனரத் தனது கள்ளக்காதலனுடன் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக பணத்துடன் ஓடிப்போய் விட்டார்.
அதிர்ச்சியடைந்த மனித், தாய்லாந்து குடோன் போலீசில் புகார் அளித்தார்.
ஓடிப்போன மனைவி அங்கனரத்துடன் 26 வருடங்களாக வாழ்ந்ததாகவும், தங்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
தமக்கிடையே எல்லாம் நன்றாக இருப்பதாகத் தோன்றியதாக மனித் தெரிவித்தார்.
பணப்பரிசில் கிட்டியதும், ஒரு கோவிலுக்கு 1 மில்லியன் பாட் நன்கொடையாக வழங்க முடிவு செய்திருந்தனர். அத்துடன், பணம் வழங்கும் விழாவில் பங்கேற்க சில நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்தனர்.
விழாவில் ஒரு அந்நியரைக் கண்டதாக மனித் தெரிவித்தார். ஆனால், அவர் தனது உறவினர் என, அங்கனரத் கூறி சமாளித்து விட்டதாகவும், அந்த நபருடன்தான் அங்கனரத் ஓடிப்போனதாகவும் தெரிவித்தார்.
தனது தாயின் விவகாரம் தனக்குத் தெரியும் என்று மனித் தம்பதியின் மகன் பொலிஸில் தெரிவித்துள்ளார். தாயார் ஓடியவுடன் அவரைத் தொடர்பு கொண்டதாகவும், அவர் தனது பகுதியிலிருந்து சுமார் 268 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோங் கைக்கு சென்றுவிட்டார் என்பதையும், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காரில் பயணம் செய்ததையும் கண்டுபிடித்ததாக கூறினார்.
அதன் பின்னர் தனது தாயின் மொபைல் போன் அணைக்கப்பட்டதால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தம்பதியின் மகன் மேலும் கூறினார்.
பணத்தைத் திரும்பப் பெற உதவ முடியாது என்று மனிதிடம் காவல்துறை தெரிவித்தது. ஏனெனில் அந்த வங்கிக் கணக்கு அங்கனரத்துடையது என்பதால் அதைத் திரும்பப் பெற முடியாது. மேலும், இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, ஏனெனில் அவர்கள் திருமணச் சான்றிதழில் கையெழுத்திடவில்லை. எனவே அவர் மனைவிக்கு பணத்தை பரிசாக கொடுத்ததாகவே கருதப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
அங்கனரத்தைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு வாங்கும் வழியைக் கண்டறியுமாறு போலீஸார் பரிந்துரைத்தனர்.