26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
விளையாட்டு

உலககோப்பை கால்பந்து திருவிழா: மெஸ்ஸி, ரொபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஜாலங்கள் அரங்கேறும் குரூப் C

2022 கட்டார் உலககோப்பை கால்பந்து திருவிழாவில் அர்ஜென்டினா, மெக்சிகோ, போலந்து, சவுதி அரேபியா அணிகள் C பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் நட்சத்திர வீரர்களான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போலந்தின் ரொபர்ட் லெவன்டோவ்ஸ்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றனர்.

அர்ஜென்டினா

தரவரிசை 3; பயிற்சியாளர் – லயோனல் ஸ்கலோனி

2021ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் பிரேசிலை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது, ஃபைனலிசிமா கோப்பையில் (ஐரோப்பிய சம்பியன்கள் மற்றும் கோபா அமெரிக்கா சம்பியன்களுக்கு இடையேயான மோதல்) இத்தாலிக்கு எதிரான வெற்றி ஆகியவற்றால் அர்ஜென்டினா அதிக நம்பிக்கையுடன் கட்டாரில் கால் வைத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கக்கூடும். கால்பந்து உலகில் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ள மெஸ்ஸிக்கு, உலக சம்பியன் பட்டம் மட்டும் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இந்த சீசனில் பிரெஞ்சு லீக்கில் தனது கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனுக்காக சிறந்த ஃபோர்மில் இருந்தார் மெஸ்ஸி.

இடைக்கால அடிப்படையில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்கலோனி, திறமையான மற்றும் ஒருங்கிணைந்த பிரிவை உருவாக்கி உள்ளார். அர்ஜென்டினா கடைசியாக பங்கேற்ற 35 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. இந்த வகையில் 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் இத்தாலி அணி 37 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் உலக சாதனை படைத்தது. இதனை முறியடிக்க அர்ஜென்டினாவுக்கு இன்னும் 2 வெற்றி, அல்லது சமன்களே தேவை. இருப்பினும் கட்டார் உலகக் கோப்பையில் இத்தாலியின் சாதனையை முறியடிப்பது அர்ஜென்டினாவின் முன்னுரிமையாக இருக்காது. மாறாக லீக், நொக் அவுட், கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டி என ஏழு ஆட்டங்களிலும் வென்று சம்பியன் பட்டத்துடன் மெஸ்ஸிக்கு தகுந்த பிரியாவிடையை வழங்குவதிலேயே முழு கவனமும் இருக்கக்கூடும்.

பலம்: கோபா அமெரிக்கா வெற்றி அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ரோட்ரிகோ டி போல் நடுகளத்தில் வலுவாக இருப்பதால் மெஸ்ஸி தனக்கான இடத்தை உருவாக்கி சுதந்திரத்துடன் விளையாட முடியும். லவுதரோ மார்டினெஸ் ஸ்ட்ரைக்கராக களமிறக்கப்படுவார் என்பதால் மெஸ்ஸி மிட்ஃபீல்டுக்கும் தாக்குதலுக்கும் இடையில் மந்திர ஜாலம் நிகழ்த்தக்கூடும்.

பலவீனம்: ஏஞ்சல் டி மரியா மற்றும் பாலோ டைபலா ஆகியோரின் காயம் அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை தயாரிப்புகளுக்கு பெரும் அடியாக இருந்தது. இருவரும் இப்போது முழு உடற்தகுதி பெறுவதற்கு போராடி வருகின்றனர். செட்-பீஸைப் பாதுகாப்பது பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.

மெக்சிகோ

தரவரிசை 13; பயிற்சியாளர் – ஜெரார்டோ மார்டினோ

தொடர்ச்சியாக 7 வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது மெக்சிகோ. குரூப் சி இல் உள்ள மற்ற அணிகள் மெக்சிகோவை கண்டு சற்று எச்சரிக்கையாக இருக்கும், ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும் வீழ்த்தும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. 2018 ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் வலிமைமிக்க ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது மெக்சிகோ. இதை கால்பந்து ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினாவின் முன்னாள் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோ தலைமையிலான மெக்சிகோவின் தற்காப்பு அணுகுமுறை நிச்சயமாக எதிரணியினரை விரக்தியடையச் செய்யும்.

பலம்: மெக்சிகோ தனது தரவரிசைக்கு தகுந்தபடி சில அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ளது. கப்டன் ஆண்ட்ரெஸ் குர்டாடோ மற்றும் கோல்கீப்பர் கில்லர்மோ ஓச்சோவா ஆகியோருக்கு இது 5 வது உலகக் கோப்பை தொடராகும். மிட்ஃபீல்டர் ஹெக்டர் ஹெர்ரெரா மற்றும் சென்டர்-பேக் ஹெக்டர் மொரேனோ ஆகியோர் 100 க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம்பெற்றவர்கள்.

பலவீனம்: செவில்லா கிளப்பின் விங்கர் ஜீசஸ் கரோனா கணுக்கால் காயத்திலிருந்து மீளவில்லை. 2020ஆம் ஆண்டு நவம்பரில் தலையில் பலத்த காயம் அடைந்த ஸ்ட்ரைக்கர் ரவுல் ஜிமினெஸ் இன்னும் ஃபோர்முக்கு திரும்பவில்லை.

போலந்து

தரவரிசை 26; பயிற்சியாளர் -செஸ்லாவ் மிக்னிவிச்

போலந்து 8 வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. அந்த அணியின் 1974 மற்றும் 1982 உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. 1986ஆம் ஆண்டு நொக் அவுட் சுற்றில் பிரேசிலிடம் போலந்து தோல்வி கண்டது. இதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் போலந்து அணி லீக் சுற்றை தாண்டவில்லை. தொடர்ச்சியாக 2வது ஆண்டாக பிஃபாவின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொபர்ட் லெவன்டோவ்ஸ்கி, தங்கள் அணியை மீட்டெடுக்க முன்னணியில் இருந்து வழிநடத்துவார் என்று போலந்து ரசிகர்கள் நம்புகின்றனர். இருப்பினும் கட்டார் உலகக் கோப்பை தொடருக்கு போலந்து அணி போராடியே தகுதி பெற்றது. உலகக் கோப்பைக்குள் பிளே-ஓஃப் வழியேதான் வர முடிந்தது.

பலம்: லெவன்டோவ்ஸ்கி கட்டாரில் தனது பிரகாசமான ஆட்டத்தை தொடருவார் என்று போலந்து நம்புகிறது. தாக்குதல் ஆட்டம் தொடுத்து கோல் அடிக்கும் திறன் கொண்ட கிர்ஸிஸ்டாஃப் பியாடெக், அர்காடியஸ் மிலிக் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பலவீனம்: கமில் க்ளிக் பின்வரிசையில் பலம் சேர்க்கிறார், ஆனால் மிட்ஃபீல்டில் தரம் இல்லை. பியோட் ஜீலின்ஸ்கி மட்டுமே நடுகளத்தில் குறிப்பிடத்தக்க வீரராக உள்ளார்.

சவுதி அரேபியா

தரவரிசை 51; பயிற்சியாளர்: ஹெர்வ் ரெனார்ட்

சவுதி அரேபியா தனது அண்டை நாடான கட்டாரில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். ஆசிய தகுதி சுற்றில் ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்த குழுவில் சவுதி அரேபியா முதலிடம் பிடித்திருந்தது. சவுதி அரேபியாவின் முதல் ஆட்டம் வலுவான அர்ஜென்டினாவுக்கு எதிராக அமைந்துள்ளது.

பலம்: சவுதி அரேபியாவுக்கு கட்டாரில் விளையாடுவது என்பது சொந்த நாட்டில் விளையாடும் உணர்வை தருவது போன்றே இருக்கும். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இங்குள்ள அல் ஹிலால் கிளப்புக்காக விளையாடக்கூடியவர்கள். இதனால் சவுதி அரேபியா அழுத்தம் இன்றி செயல்படலாம்.

பலவீனம்: சவுதியில் தரமான ஸ்ட்ரைக்கர் இல்லை. அவர்கள் கோல் அடிக்க விங்கர் சலீம் அல்-தவ்சாரியை அதிகம் சார்ந்துள்ளனர். அவர் கோல் அடிக்கத் தவறினால், சவுதி பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment