மாத்தளை ரணபிமகம பகுதியில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி மூன்றரை வயது குழந்தையை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் வீடு, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் மீது சந்தேகநபர் வாளால் தாக்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தான்.
அயல் வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் இரு மகன்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வீடு, சொத்துக்களே தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.