நவம்பர் மாதத்தில் வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர், மேலும் 14 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பதுளையில் 3 பேர், புத்தளத்தில் இருவர், கண்டி, மாத்தளை மற்றும் திருகோணமலையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் 1,076 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 15 மாவட்டங்களில் 3,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கனமழை, பலத்த காற்று மற்றும் நிலச்சரிவு காரணமாக ஒரு வீடு இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், 220 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.