டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 2 மணிக்கு வெளியில் சென்ற அவர், நாய்களுக்கு ஒவ்வொரு துண்டாக வீசி உடல் பாகங்களை அழித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா வாக்கர்(26). கடந்த 2019ஆம் ஆண்டில் வசாய் நகரை சேர்ந்த அஃப்தாப் அமீன் பொன்னவாலா (28) என்பவருடன் ஷ்ரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் அப் மூலம் அறிமுகமாகினார்கள். விரைவில் காதலர்களாக மாறினர்.
வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதை ஷ்ரத்தாவின் பெற்றோர் விரும்பவில்லை. மகளின் காதலுக்கு அவர்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலனுக்காக பெற்றோரை உதறித் தள்ளினார் ஷ்ரத்தா.
2019ஆம் ஆண்டில் “நான் உங்கள் மகள் என்பதை மறந்து விடுங்கள்“ என பெற்றோரிடம் கூறிவிட்டு, காதலனுடன் புறப்பட்டுள்ளார்.
காதலர்கள் நைகானில் வாடகை வீட்டில் குடியமர்ந்தனர். ஷ்ரத்தா மலாடில் உள்ள தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கால் சென்டரில் பணிபுரிந்தார், அதே நேரத்தில் அஃப்தாப் கிராஃபிக் வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டார்.
மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
டெல்லியில் பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் ஷ்ரத்தா பணியாற்றினார். காதலன் அஃப்தாப் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார். அத்துடன், இன்ஸ்டகிராமில் உணவு தொடர்பாக பதிவிட்டு வந்தார்.
டெல்லியின் மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்த அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
திருமணத்துக்கு வற்புறுத்தல்
காதலன் அஃப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்தது. தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அஃப்தாபிடம் அவர் வற்புறுத்தினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நாள்தோறும் இரவில் ஷ்ரத்தாவை, அஃப்தாப் அடித்து துன்புறுத்தி உள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் வாழ்ந்ததால் தனது துயரத்தை குடும்பத்தினரிடம் ஷ்ரத்தா கூறவில்லை. எனினும் மும்பையில் வசிக்கும் தனது பள்ளிப் பருவ நண்பர் லட்சுமணன் நாடாரிடம், ஷ்ரத்தா தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். வாழ்வின் துயரங்களை அவருடன் பகிர்ந்து வந்துள்ளார்.
2020இல் ஷ்ரத்தாவின் தாயார் இறந்தார். மரணவீட்டிற்கும் ஷ்ரத்தா செல்லவில்லை.
கடந்த 2 மாதங்களாக லட்சுமணனால், ஷ்ரத்தாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஷ்ரத்தாவின் சமூக வலைதள பக்கங்களும் எவ்வித பதிவுகளும் இன்றி முடங்கி இருந்தன. சந்தேகமடைந்த லட்சுமணன், கடந்த ஓகஸ்டில் ஷ்ரத்தாவின் அண்ணன் ஸ்ரீஜெய் விகாஸிடம் தகவல் தெரிவித்தார்.
டெல்லி வந்த பெற்றோர்
இதைத் தொடர்ந்து ஒக்ரோபர் 6ஆம் திகதி ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன் மகாராஷ்டிராவின் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றும், அவரது சமூக ஊடகக் கணக்கில் பதிவிடப்படுவதில்லையென்பதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒக்டோபர் 12 ஆம் திகதி, மாணிக்கபூர் போலீசார் ஷ்ரத்தாவை காணவில்லை என்று புகார் பதிவு செய்தனர்.
அஃப்தாபை பொலிசார் விசாரணைக்கு அழைத்த போது, டெல்லியில் இருந்து இரண்டு முறை விசாரணைக்கு வந்து சென்றார். ஷ்ரத்தா தன்னுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தாலும், பல ஆண்களுடன் டேட்டிங் செய்ததாகவும், அவர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்றதாகவும், லிவிங் டு கெதர் வாழ்க்கை என்பதால் அவளை தன்னால் தடுக்க முடிவில்லையென்றும் கூறியுள்ளார்.
இதில் ஏதோ மர்மம் இருப்பதை புரிந்த பொலிசார், ஷ்ரத்தாவின் தந்தைக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், கடந்த 8ஆம் தேதி மகளை தேடி விகாஸ் மதன் நேரடியாக டெல்லி சென்றார். மகள் வசித்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது அந்த வீடு பூட்டிக் கிடந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி மஹரவுலி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இது குறித்து 10ஆம் திகதி பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
டெல்லி போலீஸார் விரைந்து செயல்பட்டு ஷ்ரத்தாவின் காதலன் அஃப்தாபை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
கூகிளின் உதவியுடன் கொலை
போலீஸாரிடம் அஃப்தாப் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது: ‘‘நானும் ஷ்ரத்தாவும் ‘லிவிங் டுகெதர்’ அடிப்படையில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா வற்புறுத்தினார். திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த மே 18ஆம் திகதி இரவில் எங்களுக்குள் மிகப்பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது. நான் அவளை அடித்தபோது கூக்குரலிட்டாள். அவளது வாயையும் மூக்கையும் தலையணையால் நீண்ட நேரம் அழுத்தினேன்.
இதில் மூச்சுத் திணறி அவள் துடிதுடித்து உயிரிழந்தாள். யாருக்கும் தெரியாமல் கொலையை மறைக்க திட்டமிட்டேன். உடலை குளியலறையில் வைத்து விட்டு, 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன பெட்டியை அருகிலுள்ள கடையில் வாங்கினேன். நான் வேலை செய்யும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை எடுத்து வந்தேன்.
மனித உடற்கூற்றியல் பற்றிய இணையத்தில் தேடிப்பார்த்து விட்டு, கத்திகள் மூலம் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும் கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினேன். ஒட்டுமொத்தமாக அவளது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்தேன். மனித உடற்கூற்றியலை படித்தது, உடலை துண்டுகளாக்க உதவியது.
முகப்பகுதியை இறுதியாக வீசினேன். குளிர்சாதன பெட்டியில் முகம் இருக்கும் வரை, தினமும் தூங்குவதற்கு முன்னர் முகத்தை பார்த்தேன்.
நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்தேன். தொடர்ச்சியாக 18 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியெறிந்தேன். அவற்றை நாய்கள் கவ்வி சென்றுவிட்டன.
வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக நாள்தோறும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்தேன். யாருக்கும் என் மீது சந்தேகம் எழவில்லை. வழக்கமாக பணிக்கு சென்றுவந்தேன். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகிவிட்டேன். ஆனால் போலீஸார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத் தில் தெரிவித்துள்ளார்.
தரையில் படிந்த இரத்தத்தை எப்படி அகற்றுவது என கூகிளில் தேடிப்பார்த்து, சில இரசாயனங்கள் மற்றும் அப்புறப்படுத்திய கறை படிந்த துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்க சீரியல் பாணியில் தடயம் அழிப்பு
அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி சனலில் கடந்த 2006 ஆம்ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெக்ஸ்டர் என்ற சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியலின் கதாநாயகன் டெக்ஸ்டர் மோர்கன், பொலிஸ் தடயவியல் நிபுணராக பணியாற்றுவார். அதேநேரம், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கொலை செய்வார்.
குற்றவாளியை கொலை செய்த பிறகு உடலை பல துண்டுகளாக வெட்டி கடல் அல்லது கால்வாயில் வீசுவது கதாநாயகனின் வழக்கம். இந்த சீரியலை அஃப்தாப் விரும்பி பார்த்துள்ளார். அதை பார்த்தே ஷிரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி தடயத்தை அழித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
நட்சத்திர ஓட்டலில் சமையல்காரனாக அவர் பணியாற்றியதால் இறைச்சி வெட்டும் கத்தியால் ஷ்ரத்தாவின் உடலை எளிதாக வெட்டி உள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஷ்ரத்தாவை கொன்ற பிறகு உடலை வெட்டிய அதே அறையில் அஃப்தாப் தினமும் தூங்கியுள்ளார்.
கொலைக்கு பின்னர், ஷ்ரத்தாவின் தோழிகளிற்கு சந்தேகம் ஏற்படக்கூடாதென்பதற்காக அவர்களுடன் இன்ஸ்டகிராம் ஊடாக அரட்டை அடித்துள்ளார். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக அவர் ஜூன் வரை கிரெடிட் கார்டு பில்களையும் செலுத்தினார்,
ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் 14 துண்டங்கள் மீட்கப்பட்டன. அவை ஷ்ரத்தாவினதா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்.
தற்போது அவர் 5 நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.