கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தமுபினின் இதயத்தை துளைத்திருந்த ஆணியை பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவரது உடலில் இருந்து மொத்தம் 7 ஆணிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி, கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். தீயில் கருகி கிடந்த முபினின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது: கோட்டைமேட்டில் இருந்து சங்கமேஸ்வரர் கோயில் வழியாக டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி காரில் புறப்பட்ட முபின், சங்கமேஸ்வரர் கோயில் அருகே சென்றபோது காரை நிறுத்தியுள்ளார். அங்கிருந்து 80 மீட்டர் தூரத்தில் உள்ள டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸார் இருப்பதை பார்த்ததும் காரில் இருந்த காஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்துவிட்டு தப்பும்போது முபினும் சிக்கி உயிரிழந்தார் எனத் தெரியவந்தது.
எனினும், கார் உருக்குலைந்து இரண்டாக கிடந்த நிலையைப்பார்க்கும்போது, காரில் வெடிமருந்துகள் இருந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் கார் அருகே 2 சிலிண்டர்கள், 3 டிரம்கள், ஆணிகள், கோலி குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸார், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, கார் வெடி விபத்தில் முபின் உயிரிழந்த விதம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, காரில் இருந்த முபின் உள்ளே இருந்த சிலிண்டரை பற்றவைத்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அதற்குள் சிலிண்டர் வெடித்து, அதனுடன் இருந்த பொருட்களும் வெடித்துள்ளன.
கோயில் கதவு திறந்தது: இந்த கார் வெடிப்பால் ஏற்பட்டஅதிர்வின் காரணமாக, மூடப்பட்டிருந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் கதவு தானாக திறந்துள்ளது. வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக முபினின் காதுகள், மூக்கு, வாய் வழியாக ரத்தம் வழிந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம். மேலும், அவரதுஉடலில் 7 ஆணிகள் ஆங்காங்கே குத்திக்கிடந்தன. இவை அனைத்தும் 2 அங்குலம் அளவு கொண்டவை. அதில் ஒரு ஆணி முபினின் இதயத்தை துளைத்து உள்ளே இருந்தது. பிரேத பரிசோதனையின்போது இந்த ஆணிகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அதேசமயம், முபினின் உடல் தீ விபத்தில் பெரியளவில் கருகவில்லை. உடலின் பாகங்களும் சிதறவில்லை. கார் வெடித்தவுடன் உள்ளே இருந்து அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இத்தகவல்களை போலீஸ் உயரதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர்.