சட்டவிரோதமான படகு மூலம் கனடா நோக்கி சென்ற 300 இலங்கையர்கள் கடலில் நிர்க்கதியான நிலையில் இருந்த நிலையில், சிங்கப்பூர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கடற்புலி அமைப்பின் முன்னாள் போராளிகளை மாலுமிகளாக கொண்டு, பல முன்னாள் போராளிகள் மற்றும், பொதுமக்கள் என இலங்கையர்களை ஏற்றியபடி கனடா சென்ற படகு ஒன்று தென்சீனக்கடலிற்கு அண்மையில் மூழ்கும் நிலையிலிருந்தது.
இலங்கையில் வடக்கிலிருந்த பல முன்னாள் போராளிகளிற்கு, இந்த படகில் இலசமான பயண வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
பிலிப்பைன்சிற்கு சொந்தமான தீவு ஒன்றிலிருந்து இந்த படகு பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த படகு மூழ்க ஆரம்பித்ததும், படகிலிருந்தவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் உதவி கோரினர். எதிர்பார்த்த உதவி உடனடியாக கிடைக்காத நிலையில், படகிலிருந்த ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா, படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கடற்படையினரைத் தொடர்புகொண்டு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததை உறுதி செய்தார்.
கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்தார்.
பின்னர் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்தனர்.
கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே கடற்படைக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும் எனவும், ஏனையவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் டி சில்வா தெரிவித்தார்.