பொலன்னறுவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை, புனர்வாழ்வு நிலையத்திற்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மையத்தில் இருந்து ஏராளமான கைதிகள் தப்பியோடினர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
514 கைதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் உள்ளதாகவும், மோதல்களில் ஈடுபடாதவர்களில் 218 பேர் சேனபுர புனர்வாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத் உறுதிப்படுத்தினார்.
மேலும் 211 கைதிகள் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 33 பேரை காணவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து சுமார் 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். மையத்தில் இருந்து தப்பியோடியவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தப்பியோடிய பலர் மீள வந்தனர்.
இதற்கிடையில், நேற்றைய கந்தகாடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரினார்.