முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, வீடொன்றில் அடைத்து வைத்து, 40,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி பணியிடத்திற்கு செல்வதற்காக புகையிரதத்தில் ஏறுவதற்காக தனது வீட்டில் இருந்து தனது மைத்துனருடன் வெயாங்கொடை புகையிரத நிலையத்திற்கு வந்ததாக இந்த பொலிஸ் சார்ஜன்ட் வெயாங்கொடை பொலிஸாரிடம் தெரிவித்தார்.
மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கி காமினி ஹோல் சந்தியை நோக்கி நடந்து கொண்டிருந்த போது நீல நிற வாகனத்தில் வந்த சிலர் தனக்கு அருகில் நிறுத்தி காலி வீதியை நோக்கி செல்வதற்கு வழி கேட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச் சென்று ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், உணவு மற்றும் பானங்கள் கொடுத்ததாகவும் அவர் பொலிசாரிடம் கூறினார்.
அன்று இரவை அந்த வீட்டிலேயே கழித்ததாகவும், காலையில் யாரோ ஒருவர் “தவறான நபரை அழைத்து வந்துள்ளீர்கள். உனக்கு சரியாக வேலை செய்யத் தெரியாது” என்று இன்னொருவரைக் கடிந்து கொண்டதாகவும் கூறினார்.
தன்னை கடத்தியவர்கள் தன்னிடம் இருந்த 40,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றதாகவும், மீண்டும் கண்ணை கட்டி வாகனத்தில் ஏற்றி எங்கோ இறக்கிவிட்டு சென்றதாகவும், பின்னர், அந்த பகுதி பெலியத்த என்பதை அறிந்ததாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
நவம்பர் 2 ஆம் திகதி மாலை தனது கணவர் காணாமல் போனதாக சார்ஜன்ட்டின் மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.