துருக்கியில் 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கி ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து செய்து தூக்கி வீசி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 7, 2020 அன்று துருக்கிய தலைநகர் அங்காராவுக்கு அருகிலுள்ள ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்தது.
உயர்நிலைப் பாடசாலை மாணவி காம்ஸே அசார் என்பவரே கொல்லப்பட்டார்.
டைம்ஷேர் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளிற்கான நேர்காணல் என ஒன்லைனில் வெளியான விளம்பரத்தை நம்பி, அந்த ஹொட்டலுக்கு மாணவி சென்றிருந்தார்.
போலி நேர்காணல் விளம்பரத்தை வெளியிட்டவர்களில் ஒருவரான ரிசா டோகனால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், பின்னர் கூட்டாளி முஸ்தபா எம்ரே டெமிரல் உதவியுடன் மாணவியை தூக்கி தரையில் எறிந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான மேலும் மூன்று பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
ரிசா டோகன் “வேண்டுமென்றே கொலை செய்ததற்காக” குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாலியல் வன்கொடுமைக்காக மேலும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சுதந்திரம் பறிக்கப்பட்டதற்காக ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும்.
வேண்டுமென்றே கொலை செய்ததற்காக டெமிரலுக்கு ஆயுள் தண்டனையும், சுதந்திரத்தை பறித்ததற்காக ஒன்பது ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.
மற்றையவர்கள் மெஹ்மெட் டோகன், எம்ரே எக்கர் மற்றும் ஹுசெயின் எம்ரே குர்கன் ஆகியோர் சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
ஐந்து பேரும் தங்களை “டைம்ஷேர் நிறுவன ஊழியர்கள்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக அங்காரா மேற்கு தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இரவு முழுவதும் ஐந்து குற்றவாளிகளும் மது அருந்தியுள்ளனர்.
அடுத்த நாள் காலை ஹோட்டல் பால்கனியில் இருந்து மாணவி தூக்கி எறியப்பட்டார்.
காம்சே தற்கொலை செய்ததாக டோகன் கூறினார், ஆனால் விசாரணையாளர்களால் பால்கனி தடுப்பில் மாணவியின் கைரேகைகள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
1.08 மீட்டர் உயரமுள்ள தடுப்பை தொடாமல் வெறுமனே தாவிக் குதிக்க முடியாத அளவுக்கு உயரமாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் இறந்த இடத்தில் அவரது கால்சட்டையும் கழற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையாளர்கள் அறையைச் சுற்றி உடைந்த பொருள்கள் மற்றும் கண்ணாடி சிதறிக்கிடப்பதைக் கண்டறிந்தனர்.. அங்கு இழுபறி நடந்ததை குறிக்கிறது.
அவரது மாமா முராத் யில்மாஸ் கூறினார்: “காம்சேயின் கால்சட்டை பொத்தான்கள் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது தற்கொலை அல்ல, கொலை.
அவர்கள் அவளை இரவில் அடித்தனர், அவளது அலறல் சத்தத்தை பலர் கேட்டனர்“ என்றார்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்தான்புல் மாநாட்டில் இருந்து அந்நாடு அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பிறகு, துருக்கியில் பெண் கொலைகள் அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது.
2021 ஆண்டு தரவு அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் 280 பெண்கள் ஆண்களால் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 217 பெண்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளனர்.
தரவுகளின்படி, துருக்கியில் இந்த ஆண்டு இதுவரை 333 பெண் கொலைகள் நடந்துள்ளன.