நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரை தென்னாபிரிக்க அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான். இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடியது. அதனை தங்கள் வசம் வசியமும் செய்துள்ளது பாகிஸ்தான். மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறையின் கீழ் இந்த வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு நவாஸ் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் இணைந்துணர். இருவரும் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நவாஸ் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் இப்திகார் அகமது மற்றும் ஷதாப் கானும் இணைந்து 82 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரை சதம் பதிவு செய்தனர். இப்திகார் அகமது 35 பந்துகளில் 51 ரன்களும், ஷதாப் கான் 22 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.
.அன்ரிச் நொர்ட்ஜே 41 ரன்களிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது தென்னாபிரிக்கா. டி கொக், ரீலி ரோசோவ், பவுமா, மார்க்ரம் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். இந்த இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் 14 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாபிரிக்கா விரட்டியது.
ஆனால் கிளாசன், பார்னெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரபாடா, நோர்க்யா ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதன் காரணமாக 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் (டிஎல்எஸ் முறை) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவுமா 36, மார்க்ரம் 20 ரன்கள் எடுத்தனர்.
இந்த உலகக்கோப்பையில் இதுவரை ஜொலிக்காத ஷாஹீன் ஷா அஃப்ரிடி இன்று 14 ரன்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அரை இறுதி வாய்ப்பு?
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தங்களது அரை இறுதி போட்டிக்கான வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது. வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள பாகிஸ்தான் – பங்களாதேஸ், தென்னாபிரிக்கா – நெதர்லாந்து மற்றும் இந்தியா – சிம்பாப்வே சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளின் முடிவை பொறுத்தே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்