ஹிக்கடுவ திரணகமவில் நேற்று (31) காலை இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த பிரசன்ன மெண்டிஸ் (47) மற்றும் இசுரு பிரசன்ன (27) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
ஹிக்கடுவையில் ஒரு வருடத்திற்கு முன்னர் போதைப்பொருள் வியாபாரி கட்ட ரொஷான் என்பவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவரும் கைதாகி, பிணையில் வந்து, இரண்டு மாதங்கள் நிறைவடையாத நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரும் கட்ட ரொஷான் கொலையின் பிரதான சந்தேகநபர்கள்.
கட்ட ரொஷான் கொலை வழக்கில் ஆஜராகுவதற்காக இருவரும் காலி நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொலைகாரர்கள் T56 ஆயுதத்தால் சுட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் T56 துப்பாக்கியின் 17 வெற்று தோட்டாக்கள் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஹிக்கடுவ தலகஸ்தெனிய பிரதேசத்தில் ரொஷான் டி சில்வா எனும் கட்டா ரோஷன் என்பவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்த போது இந்த கொலை நடந்துள்ளது.
கட்ட ரொஷான் ஹிக்கடுவ பிரதேசத்தில் முன்னணி போதைப்பொருள் வியாபாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலைக்கு வழிவகுத்தது.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களான பிரசன்ன மெண்டிஸ் மற்றும் இசுரு பிரசன்ன ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன், சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையின் போது, இந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய நான்கு புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு.அஜித் ரோஹன தெரிவித்தார்.