கொட்டாவ மகும்புரவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை (ஏஎஸ்பி) துப்பாக்கியால் சுட முயற்சித்ததாகக் கூறப்படும் நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் சொகுசு கார் மொரகஹஹேன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் கஹதுடுவ வெனிவெல்கொல பிரதேசத்தில் வசிக்கும் (39) வயதுடைய வர்த்தகர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு, ஹைலெவல் வீதியில் கொட்டாவ மகும்புர நெடுஞ்சாலை நுழைவாயிலின் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இரண்டு சொகுசு வாகனங்கள் குறுக்கே சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மற்றொரு ஓட்டுநரிடம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக, அறிவுறுத்தியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி, ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை கைத்துப்பாக்கியால் சுட முற்பட்டார். இதை ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து போராடியுள்ளார். இந்த போராட்டத்தில், துப்பாக்கியின் முன்பகுதி உடைந்துள்ளது.
இதனால், கைத்துப்பாக்கியை வைத்திருந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதையடுத்து, ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையம் வந்து, கைத்துப்பாக்கியின் ஒரு பகுதியை பொலிஸாரிடம் ஒப்படைத்து சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பின், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.