சட்டவிரோதமான முறையில் உருவாக்கப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை பாணந்துறை nபாலிசார் கைப்பற்றியதுடன், அதனை ஓட்டிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் நேற்று (30) காலி கராப்பிட்டியவில் வைத்து கைது செய்துள்ளனர்.
முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த வாகனத்தின் பதிவு தொடர்பான ஆவணங்கள் சாரதியாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருக்கவில்லை.
ஜீப் வண்டியை முன்னாள் பிரதி அமைச்சரின் தனிப்பட்ட காவலராக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஓட்டிச் சென்ற போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நிஷாந்த முத்துஹெட்டிகம தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத போதிலும் அவருக்கு பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
நிஷாந்த முத்துஹெட்டிகம இந்த ஜீப்பை சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அதன் பதிவு எண் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் நிஷாந்த முத்துஹெட்டிகமவிடமும் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.