யாழ்ப்பாணக் கல்லூரிக்கு புதிய அதிபராக திருமதி ருஷிரா குலசிங்கம் நியமிக்கப்படுகிறார். கல்லூரியின் முதல் பெண் அதிபரும் என்பது விசேட அம்சமாகும்
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றுவதற்கு திருமதி ருஷிரா குலசிங்கத்தை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை நியமித்துள்ளது. திருமதி. ருஷிரா குலசிங்கம் யாழ்ப்பாணக் கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் வட்டுக்கோட்டை தலைமை பேராலயத்தில் புதிய அதிபருக்கான நிலைப்படுத்தல் ஆராதனை எதிர்வரும் 06.11.2022 ஞாயிற்றுக்கிழமை பேராயர் டானியல் தியாகராயா தலைமையில் நடைபெறவுள்ளது.
திருமதி ருஷிரா குலசிங்கம் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு BA பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் MA பட்டமும் பெற்றார்.
அவரது தொழில்முறை தகுதிகளில் பணியாளர்கள் மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கத்தினால் (SEDA) வழங்கப்பட்ட ஆசிரியர் அங்கீகாரம் (UK), கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயர் கல்வி கற்பித்தல் சான்றிதழ் (CTHE) மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தினால் (ஐக்கிய இராச்சியம்) வழங்கப்பட்ட வணிக நோக்கங்களுக்காக ஆங்கிலம் கற்பித்தல் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
திருமதி குலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் நிலையத்திலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் அலகிலும் முறையே போதனாசிரியர் மற்றும் விரிவுரையாளர் பதவிகளை வகித்தார்.
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் தலைவராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கிங் செஜோங் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், நுகேகொடை சேகிஸ் வளாகத்தில் மொழிகள் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவை முழு அளவிலான கல்வித்துறையாக தரமுயர்த்துவதில் திருமதி குலசிங்கம் ஆற்றிய முன்னணி பங்களிப்பிற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டவர்.
உயர் கல்வி அமைச்சினால் ஆங்கிலம் கற்பித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு திருமதி குலசிங்கம் ஆலோசகர் என்ற ரீதியிலே பங்களித்துள்ளார். 2011 இல் தகவல் தொழினுட்பம் மற்றும் ஆங்கிலம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் அவர் பணியாற்றினார்.
ஆங்கிலம் கற்பித்தல் துறையில் திருமதி குலசிங்கம் கொண்டிருந்த நிபுணத்துவம் காரணமாக அவரது சேவைகளைப் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், SLIATE மற்றும் SLIM போன்ற கல்வி ஸ்தானங்களும், இலங்கையில் உள்ள பல பாடசாலைகள் மற்றும் கம்பனிகளும் பெற்றிருந்தன.
அவரது பிரசுரிப்புக்கள் மற்றும் ஆய்வுச் சமர்ப்பணங்கள் வணிகம் மற்றும் தொழில்முறை ஆங்கிலம், பாடத்திட்ட மேம்பாடு மற்றும் வாய்வழி தொடர்பாடல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றன. யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி ஆகியவற்றிலும் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சிகளைத் திருமதி குலசிங்கம் நடாத்தியுள்ளார்.
திருமதி ருஷிரா குலசிங்கம் CMS பாடசாலைகளின் ஆளுநர் சபையில் கடமையாற்றியதுடன் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் முகாமையாளராகவும் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.