ரி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய முதலாவது ஆட்டத்தில், ரிலீ ரோசோவ்வின் காட்டடி சதத்தின் உதவியுடன் பங்களாதேசை சின்னாபின்னமாக்கியது தென்னாபிரிக்கா.
நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்க கப்டன் டெம்பா பவுமா முதலாவது ஓவரின் இறுதிப்பந்தில் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போது அணி 7 ஓட்டங்களை பெற்றிருந்தது. 2வது விக்கெட் 14.3 ஓவர்களில் வீழ்ந்தது. குயின்டன் டி கொக் 63 ஓட்டங்களுடன் (38 பந்துகள், 3 சிக்சர், 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 170.
இருவரும் 85 பந்துகளில் 163 ஓட்டங்கள் விளாசப்பட்டுள்ளன. ஓவருக்கு சராசரியாக 12 ஓட்டங்கள்.இதில் டி கொக் 63, ரிலீ ரோசோவ் 96 ஓட்டங்களை விளாசினர்.
ஒரு பக்கம் குயின்டன் டி கொக் அடித்து நொறுக்க, மறுபக்கம் ரிலீ ரோசோவ் சன்னதமாடி விட்டார். அவர்தான் இன்றைய ஹீரோ.
ரிலீ ரோசோவ் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 109 ஓட்டங்களை குவித்தார்.
206 என்ற வெற்றியிலக்கை விரட்ட ஆரம்பித்த பங்களாதேஸ், 16.3 ஓவர்களில் 101 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களை பெற்றார்.
அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
குழு 2 இல் தற்போது தென்னாபிரிக்கா முதலிடத்தில் உள்ளது.