கேரளாவின் கொச்சியில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையம் உள்ளது.
இங்கு விஞ்ஞானியாக பணியாற்றும் எம்.பி.ராஜேஷ் குமார், புதிய வகை ஆங்லர் மீன் ஒன்றை அந்தமான் நிகோபார் தீவு கடலில் அண்மையில் கண்டறிந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக இந்த மீனுக்கு ‘ஹிமான்டோ லோபஸ் கலாமி’ என அவர் பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து விஞ்ஞானி ராஜேஷ் குமார் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கடல் பகுதியில் நாங்கள் பயணித்து வருகிறோம். இந்த மீனை இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை. இது உலகில் எங்கும் பதிவாகவில்லை. எங்கள் மையத்தின் கடல்சார் மீன்வள ஆய்வுக் கப்பலான சாகர் சம்பதாவின் சமீபத்திய ஆய்வின்போது இந்த விசித்திரமான மீன் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் கடலுக்கு அடியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்தில் இந்த புதிய வகை மீன் கண்டுபிடிக்கப்பட்டது.