பலாலி, தையிட்டி பகுதியில் மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து, அவரை கடத்திச் செல்ல முயன்றதாக கருதப்படும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டார்.
15 வயதான சிறுமி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (22) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் பற்றி சிறுமியின் உறவினர்கள் தகவல் தருகையில்,
வர்த்தக நிலையத்திற்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஒருவர், ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வழிமறித்துள்ளார். சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர்கள் தொலைவில் அந்த பகுதியிருந்தது.
சிறுமியின் துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழிமறித்துள்ளார். சிறுமி துவிச்சக்கர வண்டியை நிறுத்தியதும், அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை இழுத்து அறுத்துள்ளார். அத்துடன், சிறுமியையும் துவிச்சக்கர வண்டியையும் காலால் உதைந்து விழுத்தியுள்ளார்.
சிறுமியின் துவிச்சக்கர வண்டியை எடுத்து வீதியோர பற்றைக்குள் வீசிவிட்டு, சிறுமியை வீதியோரமுள்ள பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். சிறுமியின் கழுத்தை நெரித்து, கடுமையாக தாக்கியுள்ளார். சிறுமி மயக்கமடைவதை போல தோன்ற, அவரை அந்த இடத்தில் போட்டுவிட்டு, வீதியோரம் நின்ற தனது மோட்டார் சைக்கிளையும் பற்றைக்குள் மறைத்து விட முயன்றுள்ளார்.
இந்த சமயத்தில் சிறுமி எழுந்து வீட்டை நோக்கி ஓடியுள்ளார்.
சிறுமி தப்பியோடியதும், அந்த நபரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.
சிறுமி வீட்டுக்கு ஓடிச்சென்றார். அவர் அதிர்ச்சியடைந்திருந்ததால் பேச முடியவில்லை. அவர் பேசிய ஓரிரு வார்த்தையின் மூலம் சிறுமியின் சங்கிலி அறுக்கப்பட்டதாக நினைத்து, திருடனை தேடி சிறுமியின் தந்தை மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இதற்குள், சிறுமியின் சங்கிலி அறுத்த நபர், சற்றுத்தொலைவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, போத்தல் குடிநீர் வாங்கி பருகியுள்ளார்.
ஏற்கெனவே அந்த நபர் சில காரணங்களால் அந்த பகுதி இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தவர். அவரது உடை அழுக்காகியிருந்தது உள்ளிட்ட காரணங்களால் அந்த பகுதி இளைஞர்கள், அந்த நபரை விசாரணை செய்ய ஆரம்பிக்க, அவர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார்.
அவரை இளைஞர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.
அவர் ஏதோ குற்றச்செயலுடன் தொடர்புபட்டதால்தான் தப்பிச் சென்றார் என்பதை உணர்ந்த இளைஞர்கள் அவரை சோதனையிட்ட போது, அவரது காற்சட்டை பைக்குள் தங்கச்சங்கிலி காணப்பட்டது.
இளைஞன் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ள தகவலறிந்த, சங்கிலியை பறிகொடுத்த மாணவியின் தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் அங்கு சென்றனர். சங்கிலித் திருடனை மாணவி அடையாளம் காட்டினார்.
அவர் முறையாக கவனிக்கப்பட்டு, பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்குள் தகவலறிந்து பொலிசாரும், இராணுவத்தினரும் அங்கு வந்தனர். இளைஞரை ஒப்படைக்கும்படியும், முறையான சட்டநடவடிக்கைகளை தாம் ஆரம்பிப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்திலேயே அவரை கையளிப்போம் என பொதுமக்கள் குறிப்பிட, சிறிய குழப்பம் அங்கு ஏற்பட்டது.
பின்னர் நிலைமை சுமுகமாகி, திருடன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைதான திருடன் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுபவர். கொலல்லங்கலட்டி பகுதியை சேர்ந்தவர்.