ரி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 82 ரன்களை குவித்துள்ளார்.
ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி பாபர் அசாம் – முஹம்மத் ரிஸ்வான் இணை பாகிஸ்தானுக்கு தொடக்கம் கொடுத்தது. பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய இந்த இணையை 2 ஓவரில் அர்ஷ்தீப் சிங் பிரித்தார். அவர் வீசிய பந்தில் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார் பாபர் அசாம். 4வது ஓவரில் 4 ரன்களுடன் ரிஸ்வானும் வெளியேற 5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்த 24 ரன்களுடன் தடுமாறியது பாகிஸ்தான்.
அடுத்த வந்த இப்திகார் அகமது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அதிரடி காட்டினார். அவருடன் ஷான் மசூத் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். 34 பந்துகளில் 51 ரன்களை குவித்த இப்திகார் அகமதை முஹம்மத் ஷமி எல்பிடபள்யூ முறையில் வெளியேற்ற 13 ஓவரில் 3 விக்கெட்டை இழந்தது 96 ரன்களை சேர்த்திருந்தது பாகிஸ்தான்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஷதாப் கான் (5) ஹைதர் அலி (2) முஹம்மத் நவாஸ் (9) சொற்ப ரன்களில் நடையைக்கட்ட 16 ஓவரிலேயே 6 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 116 ரன்களை சேர்த்திருந்தது. ஷான் மசூத் மட்டும் ஒரு புறம் நிலைத்து ஆட எதிர்புறம் வந்த வீரர்கள் நிலைக்கவில்லை. ஷஹீன் அப்ரிடி ஆட்டத்தை மாற்ற முயற்சித்து 8 பந்துகளில் 16 ரன்களை எடுத்து வெளியேறினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 159 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளையும், முஹம்மத் சமி 1 விக்கெட்டையும், புவனேஸ்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் – ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்களுடன் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து விராட் கோலி களமிறங்க, ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தில் கட்ச் கொடுத்து வெளியேறினார் கப்டன் ரோஹித் சர்மா. 4 ஓவரில் 17 ரன்களை சேர்ந்திருந்த இந்திய அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. அடுத்தடுத்து வந்து சூர்ய குமார் யாதவ் (15), அக்சர் படேல் (2) ரன்களுடனும் வெளியேற 6 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களுடன் தடுமாறியது இந்திய அணி. இதையடுத்து அணி ஹர்திக் பாண்ட்யா – விராட் கோலி இணை பாகிஸ்தான் பந்துவீச்சுகளை சிதறடித்து அணியின் ஸ்கோரை மடமடவென உயர்த்தினர்.
விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து ருத்ரதாண்டவமாடினார். ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இறுதியில் 1 பந்துக்கு 1 ரன் என்ற சூழலில் அஸ்வின் ஒரு ரன் ஓடி இலக்கை அடைந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஷ் ரஃப், முஹம்மத் நவாஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நசீம்ஷா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.