ரி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம், அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகலதுறைகளிலும் நியூஸிலாந்து அணி தனது மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ரி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சூப்பர்-12 சுற்று தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன், டேவன் கொன்வே பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஃபின் ஆலன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய கொன்வே அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் வந்த கப்டன் வில்லியம்சன் 23 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்களிலும் வெளியேறினர்.
இதையடுத்து டேவன் கொன்வே மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைந்து அவுஸ்திரேலி வீரர்களின் பந்துகளை நாலாப்புறமும் விரட்டியடித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 200 ரன்களை குவித்தது. இதில் கொன்வே 58 பந்துகளில் 92 ரன்களுடனும், நீஷம் 13 பந்துகளில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், அடம் ஸம்பா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. ஆரோன் பின்ஞ் – டேவிட் வோர்னர் இணை தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே வோர்னர் வெளியேற தொடக்கமே அவுஸ்திரேலியாவுக்கு மோசமாக அமைந்தது.
அடுத்தடுத்து ஆரோன் பின்ஞ்(13) மிட்செல் மார்ஷ் (16) வெளியேற, அந்த அணி தடுமாறியது. 8 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை சேர்ந்திருந்த அவுஸ்திரேலியாவின் அடுத்தடுத்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சொற்ப ரன்களில் வீரர்கள் வெளியேற 17.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா 111 ரன்களை சேர்த்து தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி, மிட்சல் சாட்னர் தலா 3 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.