மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டது.
இம்ரானின் வழக்கறிஞர் கோஹர் கான் கூறுகையில், இம்ரான் கான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“நாங்கள் அதை இப்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப் போகிறோம்.”
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி தீர்ப்பை உடனடியாக நிராகரித்ததுடன், ஆதரவாளர்களை தெருக்களில் இறங்க அழைப்பு விடுத்தது.
“எங்கள் கருத்துப்படி பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஒரு நீதிமன்றம் அல்ல, எனவே யாரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பை அவர்களால் வழங்க முடியாது” என்று கான் சார்பில் ஆஜரான பிடிஐ செனட்டர் சையத் அலி ஜாபர், தீர்ப்புக்கு முன் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கான் மீது ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உறுப்பினர் நவாஸ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, முன்னாள் பிரதமர் வெளிநாட்டு பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை அரசு பரிசு வைப்புத்தொகையிலிருந்து (தோஷகானா என்றும் அழைக்கப்படும்) வாங்கியதாகவும் ஆனால் சொத்துக்களை கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்புகளில் வெளியிடவில்லை என்றும் வாதிட்டார்.
தோஷகானா என்பது முகலாய காலத்தில் துணைக் கண்டத்தின் சுதேச ஆட்சியாளர்கள் அவர்கள் பெற்ற பரிசுகளை சேமித்து வைப்பதற்காக வைத்திருந்த “புதையல் வீடுகளை” குறிப்பிடுகிறது.
அரசு அதிகாரிகள் அனைத்து பரிசுகளையும் அறிவிக்க வேண்டும், ஆனால் ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்குக் குறைவானவற்றை மட்டுமே வைத்திருக்க முடியும்.
அதிக விலையுள்ள பொருட்கள் தோஷகானாவுக்குச் செல்ல வேண்டும், ஆனால் சில சமயங்களில் பெறுநர் அவற்றை அவற்றின் மதிப்பில் 50 சதவீதத்திற்கு திரும்ப வாங்கலாம். இம்ரான் பதவியில் இருந்தபோது இந்த தள்ளுபடியை 20 சதவீதத்தில் இருந்து உயர்த்தினார்.
இம்ரானும் அவரது மனைவியும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆடம்பர கைக்கடிகாரங்கள், நகைகள், வடிவமைப்பாளர் கைப்பைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை எவ்வாறு பெற்றனர் என்பது குறித்து பாகிஸ்தான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.
கான் சில பரிசுகளையோ அல்லது அவற்றை விற்றதில் கிடைத்த லாபத்தையோ அறிவிக்கத் தவறிவிட்டார். அவர் மீது முதலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சில பரிசுகளை அறிவிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் பின்னர், ஒரு எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பில், அவர் கிட்டத்தட்ட 22 மில்லியன் ரூபாய் ($100,000) மதிப்புள்ள பொருட்களை வாங்கியதை ஒப்புக்கொண்டார், பின்னர் அதை இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகைக்கு விற்றார்.
பாகிஸ்தான் சட்டவல்லுனர்களின் கருத்துப்படி, இந்த தீர்ப்பு வெளிப்படையான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான, தவறானது. உயர்நீதிமன்றத்தில் சவாலிற்குட்படுத்தப்படுவதன் மூலம் செயலிழக்கச் செய்யலாமென குறிப்பிட்டுள்ளனர்.