பேருவளையில் வசிக்கும் கோடீஸ்வர மாணிக்க வியாபாரி ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கேட்ட பெண்ணும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 10, மாளிகாவத்தை, ஜும்மா மஸ்திஸ் வீதியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15, மட்டக்குளியில் வசிக்கும் 45 வயதுடைய பெண் ஒருவருமே களுத்துறை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் வியாபாரம் விடயமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் பின்னர் இருவரும் ஹோட்டல் ஒன்றில் தங்கி, உல்லாசமாக இருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அப்போது, வர்த்தகரிற்கு தெரியாமல், அந்த காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் அந்தப் பெண் பதிவு செய்து கொண்டுள்ளார்.
இருவரும் இந்த மாதம் 14ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர்.
இதன்பின்னர் இந்தப் பெண், வர்த்தகரை மிரட்டி 70 இலட்ச ரூபாய் கப்பம் கோரியுள்ளார். பணம் தராவிட்டால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வர்த்தகரின் மனைவியிடம் காண்பிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வர்த்தகர் அப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 10 இலட்சம் ரூபாயை வைப்பலிட்டுள்ளார்.
எனினும் இரண்டாவது தடவையாகவும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அப்பெண், மிகுதி பணத்தை கோரி அச்சுறுத்திய நிலையிலேயே வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ள களுத்துறை நகருக்கு வருமாறு அந்தப் பெண்ணை அழைக்குமாறு பொலிஸார் வர்த்தகரிடம் தெரிவித்துள்ளதுடன், பணத்தைப் பெற்றுக்கொள்ள அப்பெண்ணும், மற்றொரு பெண்ணும் காரில் வந்த போது கைதுசெய்துள்ளனர்.
அவர்கள் வந்த காரில் நடத்திய சோதனையில், இருவரும் உடலுறவு கொள்ளும் காட்சிகள் அடங்கிய 2 சிடிக்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாகவும், அவர்கள் வந்த காரைக் கைப்பற்றியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.